இந்தியப் பெண்கள் எப்படி உடை அணியணும், எப்படி வாழணும் என்பதைப் பேச யாருக்கும் உரிமை இல்லை: ஹர்னாஸ் கவுர் சந்து

By செய்திப்பிரிவு

பஞ்சாப்: "இந்தியப் பெண்கள் எப்படி உடை அணியவேண்டும், எப்படி வாழவேண்டும் என்பது பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை" என்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்து கருத்து தெரிவித்துள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் கர்நாடகாவில் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஹர்னாஸ் கவுர் சந்துவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்,

அதற்கு ஹர்னாஸ் கவுர் சந்து, “ஆடை என்பது ஒவ்வொரு பெண்ணின் தேர்வு. இந்தியப் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பது பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது முற்றிலும் தவறு.

பெண்கள் மீது யாராவது ஆதிக்கம் செலுத்தினால், அப்பெண்கள் முன்வந்து பேச வேண்டும். ஒரு பெண் தான் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படியே அவர் வாழட்டும். நாம் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பெண்கள், நாம் ஒருவருக்கொருவர் மற்றவர்களை மதிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹர்னாஸ் கவுர் சாந்து: பிரபஞ்ச அழகி பட்டத்தை இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் மட்டும் பெற்றுள்ளனர். 1994-ம் ஆண்டு சுஷ்மிதா சென்னும், 2000-ம் ஆண்டில் லாரா தத்தாவும் இந்தப் படத்தை வென்றிருந்தனர். அவர்களை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 3-வது பெண்ணாக ஹர்னாஸ் சாந்து இந்த பட்டத்தை கைப்பற்றினார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் தற்போது அங்குள்ள கல்லூரியில் பொது நிர்வாகப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் அழகி போட்டிகளில் ஹர்னாஸ் கவுர் பங்கேற்று வருகிறார். 17 வயதில் அவர் முதல்முறையாக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.

2019-ம் ஆண்டு பஞ்சாப் மாநில அழகியாக தேர்வான அவர் கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகி பிரபஞ்ச அழகி போட்டிக்குள் நுழைந்தார். மாடலிங் செய்து வரும் இவர் சில பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE