பிர்பும் கலவரம் | மேற்கு வங்கம் மாஃபியா பிடியில் உள்ளதாக பாஜக உண்மை அறியும் குழு தகவல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பிர்பும் கலவரம் தொடர்பாக பாஜக அமைத்துள்ள உண்மை அறியும் குழுவின் அறிக்கை, வழக்கு விசாரணையில் தலையிடுவதாகவும், அதை தடம் புரட்டுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளையில் அந்தக் குழுவானது மேற்கு வங்கம் மாஃபியா பிடியில் உள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் ஒருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு நடந்த கலவரத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பிர்பும் கலவரம் குறித்து விசாரணை நடத்த பாஜக, ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், "மேற்கு வங்கம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் மாஃபியா பிடியில் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. சட்டத்தை மதிக்கும் சாமான்ய குடிமக்கள் மாநில அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு மீண்டும் கிராமத்திற்கு திரும்ப நம்பிக்கை வளர்க்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்.

பாஜகவின் உண்மை கண்டறியும் குழு மேற்கு வங்கத்திற்கு சென்ற பின்னரே, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிர்பும் கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்தார். இந்த கட்டாயத்தினால் பாஜகவின் உண்மைக் கண்டறியும் குழுவை சம்பவம் நடந்த கிராமத்திற்குள் நுழையவிடாமல் தி்ரிணாமுல் காங்கிரசின் குண்டர்கள் தடுத்தனர். ஆளுங்கட்சி குண்டர்களால் நாங்கள் தாக்கப்பட்ட போது எங்களைக் காப்பாற்ற அங்கு எந்த போலீஸோ, உயர் அதிகாரிகளோ இல்லை. இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது நடக்கவில்லை.

பிர்பும்மில் நடந்த கொலைகள் மாநில அரசின் ஆதரவு பெற்ற குண்டர்களாலேயே நடத்தப்பட்டுள்ளன. அரசு ஆதரவு பெற்று மிரட்டி பணம் பறித்தல், குண்டா டாக்ஸ், கட் பணம் மற்றும் டோலாபாஜி ஆகியவற்றின் விளைவால் நடந்துள்ளன. லஞ்சப்பணம் கொடுப்பதில் நிலவிய போட்டியும் இந்த கொலைகள் நடந்ததற்கு ஒரு காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த அறிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளகளிடம் பேசிய மம்தா பானர்ஜி, " பாஜக குழுவின் அறிக்கை வழக்கு விசாரணையில் தலையிட்டு அதனை திசை மாற்றும் செயல். இது முற்றிலுமாக அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கை. மத்திய அரசு மற்றும் பாஜகவின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வழக்கு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் எந்த கட்சியின் தலையீடும் இருக்கக் கூடாது. இது முற்றிலும் மோசமான அரசியல் பழிவாங்கும் மற்றும் ஒருதலைபட்சமான செயல். இந்த நாட்டில் அவர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறதா" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE