பாரத் பந்த் 2-வது நாள்: தமிழகத்தில் 89% அரசுப் பேருந்துகள் இயக்கம்; வங்கிச் சேவைகள் பரவலாக பாதிப்பு

By செய்திப்பிரிவு

பாரத் பந்த் 2வது நாளில் தமிழகத்தில் நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் பொதுப் போக்குவரத்து சேவை மேம்பட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதுமே வங்கிச் சேவைகள் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்றும், இன்றும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முதல் நாளில் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்தது. 67% அரசுப் பேருந்துகள் நேற்று இயங்கவில்லை. இதனால் மக்கள் தனியார் போக்குவரத்து வாகனங்களை நாடினர். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு ஷேர் ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தன.

ஆனால் இன்று இரண்டாவது நாளில் 89% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 19290 பேருந்துகளில் 17268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 98% அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்று பந்த் முழுவீச்சில் நடைபெறுகிறது. வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் மூடியுள்ளன. பொதுப் போக்குவரத்து வாகனங்களை போலீஸார் பாதுகாப்புடன் இயக்குகின்றனர். ஆனால் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகிறது.

கேரளாவின் சில பகுதிகளில் நேற்று அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் தாக்கப்பட்டனர். தனியார் வாகனங்களும் தாக்கப்பட்டன. கேரள அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. இந்த உத்தரவு ஆளும் சிபிஐக்கு ஆதரவாக இயங்கும் தொழிற்சங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கேரளாவில் இன்று அரசு அலுவலகங்களில் ஓரளவு பணியாளர்கள் திரும்பியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் நேற்று பந்த் முழுவீச்சில் நடந்தது. ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்கள் பல இடங்களிலும் நடந்தன. இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு ஆங்காங்கே மறியல் நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலையில் 100க் கணக்கான சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒடிசாவின் புவனேஸ்வர், சம்பல்பூர், பெஹ்ராம்பூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன.

இதற்கிடையில், பாரத் பந்த் குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க அனுமதி கோரி காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோகில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்