சூரியசக்தி மின் உற்பத்தி கழிவுகளை கையாளப்போவது எப்படி? - மத்திய அரசு விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சூரியசக்தி மின் உற்பத்தி கழிவுகள் குறித்து ஆராய மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

நடப்பு மக்களவைக் கூட்டத்தொடரில் இன்று தூக்குக்குடி மக்களவைத் தொகுதியின் எம்.பி. கனிமொழி, சூரியசக்தி மின் உற்பத்தி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், "புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் முக்கிய அங்கமான சூரிய சக்தி மின் உற்பத்தியில் வெளியாகும் கழிவுகள் எவ்வளவு? கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஏற்பட்ட மாநிலவாரியானக் கழிவுகளின் அளவு என்ன? மறு பயன்பாட்டின் திறனை அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? சூரிய சக்தி மின் உற்பத்தி கழிவுகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? நாட்டில் உருவாகும் சூரிய சக்தி மின்உற்பத்திக் கழிவுகளைத் கையாள்வதற்கு தனிக் கொள்கை வகுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியது: "சோலார் பேனல்கள் பொதுவாக 25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. நம் நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்திக்காக சோலார் பேனல்கள் பெரும்பாலும் 2010ம் ஆண்டு முதல் நிறுவப்பட்டவை. எனவே, கணிசமான சூரிய சக்தி உற்பத்தி நிலையங்களில் 2035 ம் ஆண்டு வரை கழிவுகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் சில சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்குள் பழுதாக வாய்ப்புள்ளது. இது தொடர்பான விவரங்கள் தனித்தனியாகப் பராமரிக்கப்படவில்லை. மேலும் சூரியசக்தி உற்பத்தியில் வெளிப்படும் கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வது குறித்தும் சூரியசக்தி மின் உற்பத்தியை மையமாகக் கொண்ட நீண்ட காலத்திற்கான பொருளாதாரத் தாக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான செயல் திட்டம் ஒன்றை உருவாக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நிதி ஆயோக் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை நிதி ஆயோக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE