உ.பி. | கைப்பேசியை மீட்க குரங்கை விரட்டிய போலீஸ் படை; 3 கி.மீ. 'தண்ணீர் காட்டிய' பின் தூக்கியெறிந்த சம்பவம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அதிக எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் பல்வேறு தொல்லைகளை பொதுமக்களுக்கு அளிப்பது வழக்கமாகி விட்டது. தனக்கு கிடைக்காத உணவினால், இவ்வாறு செய்யும் குரங்குகள் தற்போது கைப்பேசிகளை பிடுங்கத் தொடங்கிவிட்டன. பாக்பத் காவல் நிலையத்தில் ஒரு போலீஸிடம் கைப்பேசியை பறித்தது ஒரு குரங்கு. இதை மீட்க போலீஸ் படை, சுமார் மூன்று கி.மீ தூரம் விரட்டிய பின், தூக்கி எறிந்துச் சென்றது குரங்கு.

பாக்பத்தின் பினவுலி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தேவேந்திர குமார் பின்புறப்பகுதியில் வியாழக்கிழமை மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார். அவர் அமர்ந்த மேஜையின் மீது தன்னிடமிருந்த அக்காவல் நிலைய ஆய்வாளரின் கைப்பேசியை வைத்திருந்தார் தேவேந்திர குமார். அப்போது அங்கு வந்த குரங்கு சிறிதுநேரம் உணவுக்காக ஏக்கக்துடன் காத்திருந்தது. இது கிடைக்காத நிலையில், சட்டென காவலர் தேவேந்திர குமாரின் கைப்பேசியை பறித்துக்கொண்டு சிட்டாகப் பறந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த காவலர் தேவேந்திர குமார், அந்தக் குரங்கை விரட்டத் துவங்கினார். இதனால், தனது கைப்பேசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை இழந்தவர், தனது உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். குரங்கு பறித்துச் சென்ற கைப்பேசி காவல்நிலையத்தின் முக்கியமான சியுஜி இணைப்பை கொண்டது. அதில், பல முக்கிய வழக்குகளின் தடயங்கள் உள்ளது. இதன் காரணமாக, குரங்கின் குறும்புச் செயல், லக்னோவின் டிஜிபி தலைமையகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில், அதிர்ச்சி அடைந்த டிஜிபி அலுவலகத்தினர், எப்பாடுபட்டாவது குரங்கிடமிருந்து கைப்பேசியை மீட்க உத்தரவிட்டனர். தொடர்ந்து அக்காவல் நிலையத்தினருக்கு போனில் தொடர்புகொண்டு, குரங்கின் நிலையை பதட்டத்துடன் கேட்டறிந்தனர். அதேசமயம், கைப்பேசியை லாவகமாகப் பிடித்த குரங்கு, ஒரு வீடுகளுக்கு, மரங்களுக்கும் எனத் தாவத் துவங்கியது. வேறுவழியின்றி, சுமார் 20 பேர் கொண்ட போலீஸ் படை குரங்கை பின்தொடரத் துவங்கியது.

இக்குரங்கிடம், சிலர், ’ஆஞ்சநேயா!’ எனக் கைகூப்பி கெஞ்சினர். வேறு சில காவலர்கள் அந்த குரங்கை மிரட்டியும் பார்த்தனர். இவை எதற்கு சற்றும் அசராதக் குரங்கு ஆங்காங்கே அமர்ந்தபடியும், ஓடியும் பாக்பத்தின் போலீஸாருக்கு ஆட்டம் காட்டியது. இந்த விரட்டலின் போது ஒரு காவலருக்கு எழுந்த யோசனையால், அந்த கைப்பேசி எண்ணிற்கு தொடர்ந்து போன் செய்யப்பட்டது. இதனால், எழும்பும் ஓசையால் அக்குரங்கு அஞ்சி கைப்பேசியை தூக்கி எறிந்து விடும் எனது நம்பிக்கை. ஆனால், அந்த ஓசையை குரங்கு ரசிக்கத் துவங்கியதே தவிர கைப்பேசியை எறிந்தபாடில்லை.

குரங்குடனான இந்தப் போராட்டம் சுமார் மூன்று கி.மீ தொலைவை நடந்தும், ஓடியும் போலீஸார் சற்று களைத்துவிட்டனர். எனினும், அந்த குரங்கு சிறிதும் களைத்ததாகத் தெரியவில்லை. இதனிடையே, ஒரு முக்கியக் குற்றவாளியை பிடிக்கத் துரத்துவது போல், குரங்கின் பின்னாள் போலீஸ் படை ஓடியக் காட்சி பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. இதை வியப்புடன் கண்டு ரசித்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

இவர்களில் சில குறும்புக்கார இளைஞர்கள் அக்காட்சிகளை தம் கைப்பேசிகளில் படம் எடுக்கத் துவங்கினர். இதில், அவர்தன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதலங்களில் பதிவேற்றியது வைரலாகத் துவங்கியது. பிறகு ஒருகட்டத்தில் இந்த விரட்டல் படலம் அக்குரங்கிற்கு சளைத்து விட்டது போல. இதனால், அந்த கைப்பேசியை தூக்கு எறிந்தது. நல்லவேளையாக, அதை லாவகமாகப் பிடித்த ஒரு காவலர் கைப்பேசி சேதமாகாமல் காத்து பாராட்டைப் பெற்றார். டிஜிபி அலுவலகத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி தகவலால், அதன் அலுவலர்களும் பெருமூச்சு விட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE