ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை 3 ஆண்டுகளாக முடக்கம்: எதிர்க்கட்சி ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காததால் ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் மோசடியில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சில முக்கிய வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப் படுகிறது.

இதுகுறித்து மாநிலங் களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்துள்ள பதில் வருமாறு:

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் அனுமதிக்காக, ரூ.21,000 கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசராணை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவை யில் உள்ளது.

கடந்த 2019 முதல் 2022 பிப்ரவரி 28 வரை ரூ.21,074.43 கோடி வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக சிபிஐ முன்வைத்த 128 கோரிக்கைகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் 101 கோரிக்கைகளை நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிலுவை வழக்குகளில் மோசடித் தொகை யின் மதிப்பு ரூ.20,312.53 கோடி யாகும்.

பஞ்சாப் மாநிலம் 12 கோரிக்கைகளை நிலுவையில் வைத்துள்ளது. இந்த வழக்கு களின் மதிப்பு ரூ.298.94 கோடி யாகும். இதுபோல் சத்தீஸ்கர் 8 கோரிக்கைகளையும் (ரூ.157.26கோடி), மேற்கு வங்கம் 6 கோரிக்கைகளையும் (ரூ.293.64 கோடி), ராஜஸ்தான் 1 கோரிக்கையையும் (ரூ.12.06 கோடி) நிலுவையில் வைத்துள்ளன.

வழக்குகளை சிபிஐ விசாரிப் பதற்காக பொது ஒப்புதலை மிசோ ரம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மேகாலயா ஆகிய 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன.

இவற்றின் 7 மாநிலங்களில் சிபிஐயின் 173 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 132 கோரிக்கைகளை நிலுவையில் வைத்துள்ளது. பஞ்சாப்- 16, சத்தீஸ்கர்- 8, ஜார்க்கண்ட்- 7, மேற்கு வங்கம்- 6, கேரளா, ராஜஸ்தான் தலா 2 என கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE