“கள யதார்த்தத்தில் இருந்து கட்சி விலகியிருக்கிறது” - ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி அடிப்படை உண்மைகளில் இருந்து விலகி இருப்பதாகக் கூறி, அக்கட்சியின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைவர் விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங்கின் மகனும், ஜம்மு - காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "ஜம்மு - காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை உணர்ந்து பிரதிபலிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. அடிப்படை உண்மைகளில் இருந்து கட்சி விலகி இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பதவி விலகியது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ரமாதித்யா சிங், "தேசிய நலன்களை பிரதிபலிக்கும், ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான முக்கிய பிரச்சினைகளில் எனது நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. அடிப்படை உண்மைகளில் இருந்து கட்சி துண்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

விக்ரமாதித்யா சிங் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டபேரவையின் மேலவை உறுப்பினராவார். யூனியன் பிரதேசங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், விக்ரமாதித்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE