காற்று மாசு | பூமியின் மோசமான 100 இடங்களில் 63 இந்திய நகரங்கள் - IQAir ஆய்வறிக்கை தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நம் பூமியில் காற்று மாசு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதுவும் டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IQAir என்ற நிறுவனம் சர்வதேச காற்றுத் தரம் குறித்த இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி வளிமண்டலத்தில் மிகவும் பொதுவானதும், ஆபத்தானதுமான காற்று மாசுபடுத்திகள் - பிஎம் 2.5, பிஎம் 10, ஓசோன் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறையும் உள்ளன. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இந்த வழிகாட்டுதலின்படி மாசு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. இதில் வட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. அங்கு 15% மாசு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், IQAir என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம், சர்வதேச காற்று தரநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, காற்று மாசு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உலகின் 100 நகரங்களின் பட்டியலில் 63 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள் உள்ளன. இந்த 10 நகரங்களும் உ.பி., டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்த மாநிலங்களில் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக வாகனப் புகை, நிலக்கரி மின் நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், பயோமாஸ், கட்டுமானத் தொழில் ஆகியன உள்ளன.

கடந்த ஆண்டில் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாகக் குறைந்தது. மெட்ரோ நகரங்களில் சென்னையைத் தவிர்த்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 5 நகரங்களிலும் கடந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்தது. டெல்லியில் கடந்த ஆண்டு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நாட்கள் என 168 நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் 83 நாட்களும், மும்பையில் 39 நாட்களும் அவ்வாறாக மோசமான காற்றின் தரம் கொண்ட நாட்களாக இருந்துள்ளன.

இந்தியாவின் நிலவரம் இப்படியிருக்க, சீனாவில் கடந்த 2021-ல் காற்றின் தரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் கடந்த 5 ஆண்டுகளாகவே காற்றின் தரம் அதிகரித்துள்ளது. வாகனப் புகையைக் கட்டுப்படுத்தியது, அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டைக் குறைத்தது ஆகியன முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவிலேயே சுத்தமான காற்று தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில்தான் பதிவாகியுள்ளதாக ஸ்விஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் கூட உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE