Fastag இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்காதீர்: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ”புதிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்த தெளிவு, மத்திய பட்ஜெட்டில் இல்லை” என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி மக்களவையில் விமர்சனத்தை முன்வைத்தார்.

மக்களவையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கையில் இன்று ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி. நவாஸ்கனி உரையாற்றியனார். அப்போது அவர் பேசியது: "நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலங்களின் வளர்ச்சிக்கும், ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்கும் சாலைப் போக்குவரத்து மேம்பாடும் நெடுஞ்சாலை திட்டங்களும் அவசியமானது. மற்ற போக்குவரத்துகளைவிட சாலை போக்குவரத்து சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்திருந்தார்.

இதுபோன்ற நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் நெடுஞ்சாலை திட்டங்கள் திட்டமிடப்படும்போது பொதுமக்களின் குடியிருப்புகள், வாழ்வாதாரங்கள் பாதிப்படையாதவாறு திட்டமிடுவது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாம்பன் பகுதியில் நான்கு வழிச்சாலை திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதாக அந்த பகுதியினுடைய மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகள் மூலம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசே முன்வர வேண்டும், அவர்களுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

நிதிநிலை அறிக்கையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த நிதியாண்டில் 1.35 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது, இந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் கோடியாக உயர்த்தப் பட்டிருப்பதை வரவேற்கிறேன். கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் எத்தனை புதிய திட்டங்களை அரசு செய்ய போகிறது, எத்தனை திட்டங்களை புதுப்பிக்க போகிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. முந்தைய ஆண்டுகளில் எத்தனை நெடுஞ்சாலை திட்டங்களை அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து செய்து முடித்து இருக்கிறது என்பது குறித்த விளக்கமும் இல்லை. ஏற்கெனவே இந்த அரசு பாரத் மாலா திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் 34,500 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைப்பதற்கும் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி நிதியை ஒதுக்கி இருந்தது. ஆனால் இன்றுவரை 6,900 கி.மீ தூரம் வரையே பணிகள் முடிக்கப் பட்டிருக்கிறன. 35 சதவீதம் மட்டுமே பணிகள் நிவர்த்தி செய்யப்பட்டிருகிறது. இத்தகைய கால தாமதமானது ஏன்?

தமிழகத்தில் இருபத்தி எட்டு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு மற்றும் நிலம் கையகப்படுத்தல் தாமதம் உள்ளிட்ட காரணங்களினால் சென்னை-தடா நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை-கிருஷ்ணகிரி நீட்டிப்பு உள்ளிட்ட 28 தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் தாமதமாகி உள்ளது.

மத்திய அரசு இந்த திட்டங்களுக்கு முறையாக நிதிகளை ஒதுக்கி தாமதமில்லாமல் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அரசு தாமதப்படுத்தி இருக்கிறது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து நடைமுறைச் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். தாமதமில்லாமல் திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதில், சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதில் இந்த அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் சாலை விபத்துகளில் தன்னுடைய வாழ்வை தொலைத்து கொண்டிருப்பதை இந்த அரசு மிகுந்த அவசியத்துடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருபுறம் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டிற்கு கூடுதலாக சாலை போக்குவரத்திற்கு ரூ.65,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சாலை பாதுகாப்பிற்கு வெறும் ரூ.356 கோடி மட்டுமே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையின் தரம் உலக நாடுகளின் பட்டியலில் சாலைப் தரத்தில் 160 நாடுகளில் நம்முடைய நாடு 44 இடத்தில் உள்ளதை வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான ராமநாதபுரம், நாட்டின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு புனித யாத்திரை வருகின்றனர். ஆனால், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லாமலும், பொருளாதார வளர்ச்சி இல்லாமலும் பின்தங்கியதாகவே இந்த மாவட்டம் இருக்கிறது. எனவே, தொழில் வாய்ப்புகளை பெருக்கும் வண்ணம், வர்த்தகத்தை வளர்க்கும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தின் வழியாக ஏற்படுத்த கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காரைக்குடி - ராமநாதபுரம் நீட்டிப்பு நெடுஞ்சாலை திட்டத்தின் நிலை என்ன என்பதையும் அறிய விரும்புகிறேன். மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டம், பரமக்குடியுடன் நான்கு வழிச்சாலை நிறைவு பெற்று மீதமுள்ள ராமேஸ்வரம் வரை சாலை இரண்டு வழிச்சாலையாகவே உள்ளது. எனவே அதனை முறையாக திட்டமிட்டு ராமேஸ்வரம் வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், தனுஷ்கோடி - ராமேஸ்வரம் மதுரை - கிருஷ்ணகிரி வழியாக டெல்லி - வாரணாசி வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் பக்தர்களும் வணிகர்களும் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சாலை ஆகும். மேலும், மதுரை - ராமேஸ்வரம், தூத்துக்குடி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பான்மையான வழித்தடம் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக செல்கிறது எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை காண திட்ட இயக்குநர் அலுவலகத்தை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இது, தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருக்கின்றது.

அரியனேந்தல் முதல் ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலை இல்லை. இரண்டு வழிச்சாலைகள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு வழிச்சாலைக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலை இல்லாமல் இரண்டு வழிச்சாலை மட்டுமே இருக்கும் இடத்தில் சுங்க வரி வசூலிக்கபடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, அந்த சாலைகளில் சுங்கவரி வசூலிப்பதை ரத்து செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Fastag இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்படும்போதும், மக்கள் இரட்டிப்பு கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இதனை மாற்றி சாதாரண கட்டணமாக ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE