காஷ்மீரில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த சிஆர்பிஎஃப் உறுதி: மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்

By செய்திப்பிரிவு

ஜம்முவுக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சிஆர்பிஎப் படையின் 83-வது ஆண்டு அணிவகுப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது:

நாட்டின் வடகிழக்கு, ஜம்மு காஷ்மீர், நக்ஸல் பாதித்த பகுதியில் உள்நாட்டு பாதுகாப்பை வழங்கு வதில் சிஆர்பிஎப் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. வரும்காலங்களில் இங்கு சிஆர்பிஎப் படையை நிறுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. அந்த அளவுக்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் 33 ஆயிரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேர்வு செய்து வழங்கியுள்ளது. இதன்மூலம் யூனியன் பிரதேச அடிப்படை வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தில் 21 நீர் மின் திட்டங்கள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கியுள்ளன.

யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிக் கும் 100 சதவீத குடிநீர் வசதி, மின் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை திரும்பப் பெறவேண்டும் என்பது ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் பிரேம் நாத் டோக்ராவின் கனவு ஆகும். அவர்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளோம். இங்கு சுதந்திரமான, நியாயமான தேர் தலை நடத்த உறுதி செய்துள்ள சிஆர்பிஎப் படையினரைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அமித் ஷா பேசினார். -பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE