ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சலுகையில் விலையில் 3 மில்லியன் பீப்பாய்கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துவந்தன. அனைத்திலும் உச்சமாக கடந்த வாரம்,ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மற்ற நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எதிர்பார்த்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையெடுத்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் தருவதாக ரஷ்யா அறிவித்தது.

இந்தியா அதன் எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவிடமிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவிலே இறக்குமதி செய்கிறது. ரஷ்யா கச்சா எண்ணெய்யை சலுகையில் விலை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுவந்தது. இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்து இருந்தது. ‘ரஷ்யாவிடமிருந்து இந்தியாகச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது அமெரிக்காவின் தடையை மீறுவதாகாது. ஆனால்,அந்த வர்த்தகத்தின் காரணமாக,ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில்இந்தியா தவறான தரப்போடு நின்றதாக வரலாற்றில் நினைவுகூரப்படும்’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசியாலாக்காதீர்கள் என்று இந்தியா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏற்கனவே சலுகை விலையில் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது இரு நாட்டு நிறுவனங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு பலவிதங்களில் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பார்மா நிறுவனங்களுக்கு...

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகின் மருந்துஉற்பத்தியின் தலைமையகமாக இந்தியா உருவாகி வருகிறது.

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நிறுவனங்கள் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை இந்திய நிறுவனங்களால் நிரப்ப முடியும்.மருந்து தயாரிப்புத் துறை மட்டுமின்றி பிற துறை நிறுவனங்களுக்கும் ரஷ்யாவில் வாய்ப்புள்ளது. இவ்வாறு டெனிஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE