டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் தம்பிக்கு அரசு பணி

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது கலவரம் வெடித்து 53 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த அங்கித் ஷர்மாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். முதல்கட்டமாக ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அங்கித் ஷர்மாவின் தம்பி அன்குர் ஷர்மாவுக்கு நேற்று அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. டெல்லி கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அங்கித் ஷர்மாவின் மரணத்தில் நாங்கள் எதிர்மறை அரசியல் செய்யவில்லை. அந்த குடும்பத்துக்கு நிதியுதவியும் தற்போது அரசு பணியும் வழங்கியுள்ளோம். எதிர்காலத்திலும் அவரது குடும்பத்துக்கு உதவுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE