தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும்: திமுக எம்.பி. கவுதம சிகாமணி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பியான பொன், கவுதம சிகாமணி, மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் எம்.பி.யான கவுதம சிகாமணி 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில், "இந்த ஆண்டு நிதியமைச்சர் அறிக்கை, மோடி அரசின் பெருமுதலாளிகள் சார்பை பறைசாற்ற மட்டுமே முனைந்தது. எந்தவித கூச்சமுமின்றி, சிறுகுறு தொழில்களை ஒதுக்கிவிட்டு, தனியார் பெருநிறுவனங்களைப் பேணுகிறது.

கரோனா பெருந்தொற்றினால், கடுமையான பொருளாதார இழப்பை எதிர்கொள்ள வேண்டியதானது. தொழில்கள் முடக்கத்தால் பெரும் வேலை இழப்பும், அதன் விளைவாக வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து, மத்திய அரசின் பாராமுகத்தால், நடந்தே ஊருக்குத் திரும்பிய காட்சியை இந்த நாடு கண்டது. அப்போது ரிசர்வ் வங்கி, பாதிக்கப்பட்ட துறையினரிடம், கடன் வசூலிப்பிற்குத் தடை விதித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் அது தொடர்பான எந்த நிவாரண மேல் நடவடிக்கைகள் குறித்த எந்த அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கைகளில் காணவில்லை. தப்பியவர்கள் பிழைக்கட்டுமென விட்டு விட்டு பெருநிறுவன முதலாளிகளின் லாபத்தைப் பெருக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு பெரும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அரசு–தனியார் கூட்டணியில் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான நிலங்கள், கட்டுமானப் பணிக்கான ஆதாரங்களை வழங்க வேண்டிய மாநில அரசுகள் கலந்தாலோசிக்கப்படவில்லை, அதைவிட, மாநிலங்களின் இதேவிதமான திட்டப்பணிகளுக்கு எந்தவித நிதியுதவியும் இல்லை.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் 2021-22 திட்ட மீள் மதிப்பீட்டிற்கும் கூடுதலாக 68000 கோடி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் நிதியமைச்சர். சென்ற ஆண்டு நவம்பர் நிலவரப்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன் ரூ.3.38 லட்சம் கோடிகளாகும். அதாவது 2022-23 ஆம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டை விட 150% கூடுதலாக உள்ளது. நிதியமைச்சரின் 2020-21ஆம் ஆண்டின் உரையில் 11000 கி.மீ. நெடுஞ்சாலை நடப்புப் பணிகள் மற்றும் 8000 கி.மீ. புதிய சாலைகள் பற்றிய அறிவிப்புகளைச் செய்தார். ஆனால் அவற்றில் எவ்வளவு சாலைப் பணிகள் நிறைவுற்றிருக்கின்றன என்பதுபற்றிய எந்த மேல் விபரங்கள் எதுவும் இதுவரை இல்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் எட்டு மாநிலச் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதில், திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர், கொள்ளேகால்–ஹரூர், எம்.எம்.ஹிலார்–பாலாறு தாராபுரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், ஆற்காடு- திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி, அவினாசி-மேட்டுப்பாளையம், பவானி-கரூர் ஆகியவற்றையும் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க எங்கள் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தத் திட்டம் ஏற்கனவே கொள்கையளவில், தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான பரிந்துரையும், 2018ஆம் ஆண்டிலேயே அனுப்பப்பட்டு விட்டது.

எனவே அந்த அறிவிப்புகளை மேலும் காலதாமதமின்றி அறிவித்திட வேண்டுகிறேன். 2008 ஆம் ஆண்டு 941 கோடி திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டு 2013ல் முடிவடைந்திருக்க வேண்டிய, உளுந்தூர் பேட்டை–சேலம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. மக்கள் தொகை மிகுந்த எட்டு நகரங்கள் மற்றும் ஊர்களின்(ஆத்தூர், வாழப்பாடி, உடையார்பட்டி, சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, தியாக துருகம், எளவரசனூர், உளுந்தூர் பேட்டை) புறவழிச்சாலைகள் நிறைவடையாமல் இருவழிச் சாலைகளாக இருப்பதே இதற்குக் காரணம்.

இதன் விளைவாக சாலை விபத்துகளில் இதுவரை 800 பேருக்கு மேல் இறந்து போயுள்ளனர். பத்து ஆண்டுகளாக தொடரும் இந்த நிலை முடிவடைய வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து உட்கட்டமைப்பு, குறிப்பாக நெடுஞ்சாலைகள் பற்றி பேசி வருகிறது. அதிலும் சேலம்- சென்னை 'சாகர் மாலா' திட்டம் இரு நகரங்களையும் இணைக்கும் அதிவிரைவுச் சாலைத் திட்டம் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பசுமைவழிச் சாலைக்கு, தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து விடும் என வேளாண் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தடுத்துள்ளனர்.

ஏற்கெனவே சேலம்–சென்னையை இணைக்கும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. எனவே இந்த தேவையற்ற திட்டத்திற்கு மாற்றாக இருக்க வாய்ப்புள்ளது சேலம்- சென்னையை உளுந்தூர் பேட்டை வழியாக இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டம்.

எனவே இந்த சாலைத் திட்டத்தை, கூடுதல் விரிவாக்கம் செய்து, முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம், சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உதவுவதோடு, இந்த மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.

மத்திய அரசின் இன்னொரு மோசமான அறிவிப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்படப் போகும் ஆறு புதிய சாலைக் கட்டண வசூல் நிலையங்கள்(Toll Booths) ஆகும். 121 கி.மீ. தொலைவுச் சாலையான வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம் என்.எச்-234 ல் இரண்டும், 92 கி மி தொலைவான கடலூர்- விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலை என்.எச்– 532ல் இரண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அவினாசிபாளையம்-அவினாசி 33 கி.மீ. சாலையில் ஒன்று, 66 கி.மீ. பெரம்பலூர்–தஞ்சாவூர் சாலையில் ஒன்று எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டோல் பூத்கள் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையான போக்குவரத்து செலவுகளில் இன்னுமொரு சுமையை ஏற்றும். அதைவிட ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணத்தை 4 சதவிகித்தில் இருந்து 21 சதவிகிதமாக உயர்த்தியுள்ள நிலையில் இந்தக் கூடுதல் சுங்கச்சாவடிகளின் சுமை பளுவைக் கூட்டும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16728 கோடிகளையும், ரூ.8987 கோடிகள் பேரிடர் இழப்பீடு தொகையையும் நிலுவையில் வைத்துள்ள இந்த 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. சமீபத்திய வெள்ள நிவாரணக் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது, மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களின் நலனை மட்டுமே பேணுவதாகவும், பாஜக ஆளாத மாநிலங்களை பாரபட்சமாக நடத்துவதாகவே உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழக முதல்வர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் எவ்வளவு வலியுறுத்தினாலும் எந்தவிதமான பயனும் இல்லை, நல்லவிதமான பதில்களும் இல்லை என்பது வேதனைக்குரியது. சேலம்–உளுந்தூர் பேட்டை நான்குவழிச் சாலைப் பணியை நிறைவு செய்யக் கோருகிறேன்'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்