சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு வரும் 16-ம் தேதி பதவியேற்கிறது. மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கிறார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18, அகாலி தளம் 3, பாஜக 2, பகுஜன் சமாஜ், சுயேச்சை தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
அமிர்தசரஸ் நகரில் ஆம் ஆத்மி சார்பில் நாளை வெற்றிப் பேரணி நடத்தப்படுகிறது. இதில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பு விழா, வரும் 16-ம் தேதி நடக்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான காட்கர் கலனில் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முதல் கட்டமாக முதல்வருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக அமைச்சரவைவிரிவாக்கம் செய்யப்படும். புதியஅமைச்சரவையில் 17 பேர் வரை இடம் பெறுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே பகவந்த் மான் நேற்று டெல்லி சென்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமிர்தசரஸில் நடக்கும் வெற்றி விழா மற்றும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘எனது தம்பி பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ளார். அந்த மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago