லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளபோதிலும் ஆட்சியை கைபற்றவில்லை. அதேசமயம் அம்மாநிலத்தில் ஒரு காலத்தில் பெரும் அரசியல் சக்தியாக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2017 தேர்தலில் 19 இடங்களைக் கைப்பற்றி இருந்த அந்த கட்சி இந்தமுறை 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம் அந்த கட்சி 12.88 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு. மேற்கு உ.பி.யில் கூட ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் கூட தலித் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கைகொடுத்து வந்தது.
ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றபோதிலும் அந்த கட்சி 12 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குள் பெற்றுள்ளதன் மூலம் அந்த கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் உயிர்ப்போடு இருப்பதாகவும், அதற்கென தனியான வாக்கு வங்கி இன்னமும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த தேர்தலில் தலித் சமூக வாக்குகள் கூட பகுஜன் சமாஜ் கட்சிக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குகளும் முழுமையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வந்து சேரவில்லை.
இந்த தேர்தலில் மாயாவதியின் நடவடிக்கைகள் ஆச்சரியமாகவே இருந்தது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தநிலையில் மாயாவதி வெகுகால தாமதமாக பிரசாரத்தை தொடங்கினார்.
உத்தரபிரதேச தேர்தலுக்கு முன்னதாக, அவரது விமர்சகர்கள் ‘‘மாயாவதியை காணவில்லை’’ என்று கிண்டல் செய்தனர். பாஜக பி-டீம் என்று வேறு சிலர் கிண்டல் செய்தனர்.
அவரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவருடைய தொண்டர்கள் சோர்ந்து போயினர். இது முழுமையாக இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.
மாயாவதியின் அரசியல் பயணம்
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஒலித்து வருகிறார். மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்த மாயாவதி ஒரு காலத்தில் பிரதமர் வேட்பாளராக மற்ற கட்சிகளால் பரிசீலிக்கும் அளவுக்கு உயர்ந்த தலைவரானார்.
ஆனால் அவரது வாழ்க்கை என்பது மற்ற பலரை போல மிக எளிமையான முறையில் தொடங்கியது. ஐஏஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர், பள்ளி ஆசிரியரில் இருந்து நான்கு முறை உத்தரபிரதேச முதல்வராகும் வரை, மாயாவதியின் பயணம் ஆச்சரியமானது. அவரது ஒவ்வொரு செயலும் தலித் சமூகத்தில் பெரும் உத்வேகத்தை அளித்தது.
1956 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு சாதாரண வருவாய் கொண்ட குடும்பத்தில் பிறந்த மாயாவதி, 1975 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் காளிந்தி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாக சட்ட மையத்தில் எல்எல்பி சேர்ந்த பிறகு 1977 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய கன்ஷிராமை ஏதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது அவரது வாழ்க்கையை மாற்றியது.
அவரை அரசியலில் சேர கன்ஷிராம் ஊக்குவித்ததால் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1984ல் கன்ஷிராம் தலைமையில் கட்சியை வழிநடத்தி, 1995ல் முதல் முறையாக உ.பி.யில் மாயாவதி முதல்வரானார். அந்த தேர்தலில் முலாயம் சிங்குடன் கூட்டணி அமைத்து பாஜகவை மாயாவதி தோற்கடித்தார்.
முதல்வர் பதவி
இதன் மூலம் முதல் தலித் பெண் முதல்வராக உத்தரப்பிரதேசத்தில் பதவியில் அமர்ந்தார். அதன்பிறகு ஆட்சிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 1997ல் மீண்டும் முதல்வராக தேர்வானார் மாயாவதி. அடுத்து நடந்த 2002 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
1997 மற்றும் 2002 இல் பாஜக வெளியில் இருந்து ஆதரவு தர முதல்வராக பதவி வகித்தார். அவர் ஆட்சிக்கு வந்த முதல் மூன்று முறை அவரது அரசு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு சமாஜ்வாதியிடம் ஆட்சியை இழந்த மாயாவதி 2007தனித்து போட்டியிட்டு உத்தரப்பிரதேசத்தில் முதல்வரானார். 2007-ல் முழுக்க முழுக்க சொந்த முயற்சியில் முதல்வரானார்.
பிராமணர்கள், தலித்கள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைத்த பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய ‘சோஷியல் இன்ஜினியரிங்’ அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் எடுத்த வியூகம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் வெற்றியை குவித்தது.
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் சமாஜ்வாதி கட்சியுடன் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி கூட்டணி வைத்தார். ஆனால் அந்த தேர்தலில் புதிய அணி சேர்க்கை இருகட்சிகளுக்குமே பலனளிக்கவில்லை. மொத்தமாக வெற்றி வாய்ப்பு பாஜக பக்கம் சென்றது.
இதனால் இந்த தேர்தலில் கூட்டணி இல்லை என்ற முடிவை அவர் எடுத்தார். தனித்து போட்டியிட்டு இந்த தேர்தலில் அவரால் சாதிக்க முடியவில்லை. சீட் பெற முடியாமல் போனாலும் தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரான ஜாதவ் சமூக வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு பிரிந்து விடாமல் தற்காத்துக் கொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் மிகவும் வலிமை மிக்க தலைவராக மாயாவதி பார்க்கப்பட்டார். உத்தரப்பிரதேசம் தாண்டியும், இந்தியா முழுவதும் ஒரு சக்தியாகவே மாயவதி அறியப்பட்டார். ஆனால் அதிரடி அரசியலுக்கு பெயர் போன மாயாவதியின் போர்குணம் குறைந்து போய் விட்டதா என்ற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள் முன் வைக்கின்றனர். மாயாவதியின் அடுத்த கட்ட செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago