ஹைதராபாத்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒரு மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக, விறுவிறுப்பாகவும் பரப்பாகவும் கொண்டாடி பாஜகவை அரியணையில் ஏற்றியுள்ளனர் உ.பி மக்கள். இந்தத் தேர்தலில் உற்சாகத்துடன் களமிறங்கிய அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 97 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதன் பின்னணி என்ன?
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (சோனிலால்) 12, நின்ஷாத் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக கூட்டணி 274 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 8, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 2 இடங்களும் பகுஜன் சமாஜுக்கு ஓரிடமும் மட்டுமே கிடைத்தன.
என்னவானார் ஒவைசி? - சரி, தேர்தலில் 97 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கிய ஒவைசி என்னவானார்? ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியால் ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. இதனால் ஹைதராபாத்தில் அவரது கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் (All India Majlis-E-Ittehadul Muslimeen) ஏஐஎம்ஐஎம் கட்சி. தெலுங்கானாவில் ஒவைசியின் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனை வைத்துக்கொண்டு தெலுங்கானாவுக்கு வெளியில் தனது கட்சியை நிலைப்படுத்த ஒவைசி கடந்த 10 ஆண்டுகளாகவே முயன்று வருகிறார். ஆனால், மகாராஷ்டிரா, பிஹாரில் மட்டுமே ஓரளவு வெளியே சொல்லிக் கொள்ளும்படியான வாக்குவங்கியைப் பெற்றிருக்கிறார். இதுதவிர இவர் முயன்றும் ஜார்க்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கணக்கைத் தொடங்க இயலவில்லை.
இந்நிலையில்தான் நாடே எதிர்பார்த்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு, இந்துத்துவா கொள்கை என்று யோகி, மோடி, அமித் ஷா என அனைவரும் திட்டங்களை செயல்படுத்தி வர, தேர்தலில் தனது ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 97 வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள் என்று அறிவித்தார் ஒவைசி. உத்தரப் பிரதேச வாக்காளர்களில் 30% பேர் முஸ்லிம் வாக்காளர்கள். இதுதான் ஒவைசி 97 இடங்களில் வேட்பாளர்களைக் களமிறக்கக் காரணம். தொகுதிகளை மிகுந்த சிரத்தையுடன் தேர்வு செய்தார். வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட தொகுதிகளில் ஒவைசியின் பிரச்சாரத்துக்கும் குறைவில்லை. வீதிகளில் இறங்கி கட்சியினருடன் களப் பணியாற்றினார். வெறும் இரண்டே முறை பிரச்சாரம் செய்த காங்கிரஸின் ராகுல் காந்தியைவிட தனது ஏஐஎம்ஐஎம் கட்சிக்காக ஒவைசி ஆற்றிய களப் பணிகள் பாராட்டுதலுக்குரியது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எங்கே சறுக்கினார் ஒவைசி? - அப்படியென்றால் எங்கே சறுக்கினார் ஒவைசி. தெலங்கானாவில் கட்சித் தலைமையகத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களைக் கேட்டால், உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் ஏஐஎம்ஐஎம் மீதான நம்பிக்கையைவிட மதச்சார்பற்ற என்ற போர்வையில் வரும் கட்சிகளையே அதிகம் நம்புகின்றனர் என்றனர்.
உத்தரப் பிரதேசத்திலேயே உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி நிர்வாகிகள் களப் பணியாற்றிய சோர்வுக்கு மத்தியில் படுதோல்வி சோர்வையும் தாங்கிக் கொண்டு பேசுகையில், "ஒவைசி முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில்தான் வேட்பாளர்களைக் களமிறக்கினார். ஆனால், தெற்கிலிருந்து வரும் அரசியல்வாதிகள் பாஜக காவி கட்சி என்ற அடையாளப்படுத்துதலைத் தாண்டி வேறெதுவும் கூறுவதில்லை. காவி ஆட்சியிலிருந்து விடுவிப்போம் என்ற 'டெம்ப்ளேட் தெற்கத்திய பிரச்சாரம்' இங்கு எடுபடவில்லை" என்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவைசியின் கார் மீது ஹப்பூர் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தச் சம்பவம் கூட உ.பி.யில் ஒவைசியின் தாக்கத்துக்கான பதிலடி என்று கூட பேசப்பட்டது. ஆனால், அது அனுதாப ஓட்டாகவும் மாறவில்லை, எல்லோரும் பேசியதுபோல் ’ஒவைசி வளர்ச்சியைப் பொறுக்காமல் நடந்த சதி’ என்பதை நிரூபிக்கும் அளவிற்கு ஏஐஎம்ஐஎம் வெற்றி பெறவும் இல்லை.
கூட்டணியில் சொதப்பினாரா ஒவைசி.? - இவை ஒருபுறமிருக்க கூட்டணியில் ஒவைசி சொதப்பிவிட்டார். சமாஜ்வதி கட்சியுடன் கைகோத்திருக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் கட்சி இந்தமுறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளில் சொல்லிவைத்து அடித்துள்ளது. முஸ்லிம் சிறுபான்மையினர் வாக்கினையும் பெற்றுள்ளது. ஒருவேளை சமாஜ்வாதியுடன் ஒவைஸி கூட்டணி அமைத்திருந்தால் 30% முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என சிதறாமல் ஒவைசிக்கு கணிசமாகக் கிடைத்திருக்கும் எனக் கூறுகின்றனர். இத்தேர்தலில் ஒவைசி கட்சி பாரத் முக்ரி மோர்சா மற்றும் ஜன் அதிகாரி கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது.
வாக்குவங்கியில் முன்னேற்றம்: 97 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி இல்லை என்று ஒவைசியின் கட்சி பின்னடைவை சந்தித்திருந்தாலும், இத்தேர்தலில் அது 0.4% வாக்குவங்கியைப் பெற்றுள்ளது. கடந்த 2017 தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட ஒவைசி கட்சி 0.2% வாக்கு வங்கியைப் பெற்றது.
ஒவைசியின் கவனிக்கத்தக்க நன்றியுரை: "உத்தரப் பிரதேசத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன். ஆனால், இது மாதிரியான முடிவை எதிர்பார்க்கவில்லை. எங்களின் கட்சி கடுமையாகக் களப்பணியாற்றியது. ஆனால், உ.பி மக்கள் பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்துள்ளனர். நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம். இங்கே தோற்றுப்போன அனைவரும் ஈவிஎம் இயந்திரத்தின் கோளாறு பற்றி பேசுகின்றனர். கோளாறு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. மக்கள் மனங்களில் உள்ள 'சிப்'ல் தான் இருக்கிறது. வெற்றி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அது 80, 20-ஐ வென்ற கதை.
உத்தரப் பிரதேசத்தின் சிறுபான்மையினர் வெறும் வாக்கு வங்கிகளாகத்தான் காலங்காலமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். லக்கிம்பூர் கேரியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதனால்தான் நான் கூறுகிறேன் இது 80-20-ன் வெற்றி என்று. இந்த 80-20 நிலைமை இங்கே இன்னும் வெகுகாலம் நீடிக்கும். மக்கள் மனங்களில் இது தொடர்பான புரிதல் வர வேண்டும். ஆனாலும் எங்கள் உற்சாகம் சற்றும் குறையாது. நாங்கள் நாளையில் இருந்தே உ.பி.யில் உழைப்பைத் தொடங்குவோம். இதனால் அடுத்தத் தேர்தலில் நாங்கள் இன்னும் சிறப்பாக ஜொலிப்போம்" என்றார்.
உ.பி. தேர்தலும் 80-20-ம்.. உ.பி. தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே 80%, 20% பேசுபொருளாக இருந்து வருகிறது. ஹரித்வாரில் நடந்த இந்து மாநாட்டில் பேசிய சிலர் 80% இந்துக்கள் 20% முஸ்லிம்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசப்பட்டது. அதுபோல் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் பேசிய யோகி ஆதித்யநாத் இது 80%-க்கும் 20%-க்கும் இடையேயான போட்டி என்று முழங்கினார். அவரது பேச்சு ஹரித்வார் பேச்சை ஆதரிக்கிறதா என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை விளக்கிய யோகி, ”பாஜகவுக்கு ஆதரவாக உள்ள 80 சதவீதம் பேர் தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சியை ஆதரிக்கின்றனர். ஆனால் இதை எதிர்ப்பவர்கள் மாஃபியாக்கள், கிரிமினல்கள், விவசாய விரோதிகள். இது போன்றவர்களே நான் குறிப்பிட்ட 20 சதவீதத்தினர்” என்றார்.
உ.பி. தேர்தல் வெற்றி நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது ஒவைசி கூட்டணியில் கோட்டைவிட்டாரா, இல்லை... தென்னக மாடல் பிரச்சாரத்தினால் குறை வைத்தாரா என்பது விவாதப் பொருள். உ.பி.-யின் பரந்துபட்ட மக்களைக் கவர இன்னும் அதிகமாக வீட்டுப்பாடம் செய்ய வேண்டும் என்பதே நிதர்சனம். உ.பி.யில் அசாதுதீனின் பாப்புலாரிட்டி வாக்குகளாக மாறாததற்கு இதுவும் ஒரு காரணம்.
கற்றுக்கொள்ளலாம்.. - பாஜக மாடல் ஹோம் ஒர்க் என்னவென்பதற்கு ஒரு சிறு அடையாளம்: பிரதமர் மோடி இன்று குஜராத்தில் மக்கள் மத்தியில் ஊர்வலப் பேரணி மேற்கொள்கிறார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற நிலையில், அந்த 4 மாநிலங்களில் ஏதேனும் ஒன்றிற்க்குச் செல்லாமல் 2023-ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத்தில் சென்று மக்கள் மத்தியில் பேரணி மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதிலிருந்து ஒவைசி மட்டுமல்ல, காங்கிரஸும் பாடம் கற்றுக் கொள்ளலாம்!
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago