ஒரு முன்னாள் முதல்வரால் முதல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஒருவர், 11 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை கைப்பற்றினால் எப்படி இருக்கும்... பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான் விஷயத்தில் இந்தச் சம்பவம் உண்மையாக நடந்துள்ளது. ஆம் ஆத்மியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெறவுள்ளார் பக்வந்த் சிங் மான் என்கிற பகவந்த் மான்.
யார் இந்த பக்வந்த் மான்? - பக்வந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் என்பதாலோ என்னவோ, சிறுவயதிலேயே பேச்சாற்றல் மிகுந்தவராக இருந்தார். எந்த அளவுக்கு என்றால், ஒரு கம்பை மைக் போல வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார். இந்த ஆற்றல் பின்னாளில் அவரின் வாழ்க்கையை தீர்மானிக்க போகிறது என்பது அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அது நடந்தது. பேச்சின் ஊடே நகைச்சுவையை வெளிப்படுத்தும் அவரின் திறன் பள்ளி, கல்லூரி நாட்களில் புதிய பரிமாணம் எடுத்தது.
பக்வந்த், சுனமில் உள்ள ஷாஹீத் உதம் சிங் அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது வயது 18. அந்தக் காலகட்டத்தில், இடதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அப்போது ஒரு முயற்சி எடுத்தார். அரசியல் மற்றும் சமூகத்தின் பிரச்சினைகளை நையாண்டி பாடலாக ஒலிநாடாவில் பதிவு செய்து விற்கத் தொடங்கினார். 1992-ல், 'கோபி தி ஏ கச்சியே வியாபர்னே' என்ற பெயரில் வெளியான அவரின் முதல் ஒலிநாடாவுக்கு கல்லூரியைத் தாண்டி மிகப்பெரிய வரவேற்பு. இந்த வரவேற்பு, அவருக்கு புகழின் வெளிச்சத்தைக் காட்டியது. 18 வயதில் கிடைத்த அந்தப் புகழ் தொடர்ந்து அப்படியே பயணிக்க வைத்தது. விரைவில் நகைச்சுவை உலகில் அனைவருக்கும் தெரியும் ஒரு நபராக மாறிப்போனார் பக்வந்த். கல்லூரி நிகழ்வுகளில் அவர் செய்த காமெடி ஷோ, நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது.
தொலைக்காட்சியில் 'ஜுக்னு மஸ்த் மஸ்த்', 'ஜண்டா சிங்' போன்ற நகைச்சுவை ஷோக்களில் பல்வேறு கெட்டப் போட்டுக் கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார் பக்வந்த். இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி நகைச்சுவை கலைஞராக உச்சத்தில் இருந்தபோது பக்வந்த் தனது வாழ்க்கையை மாற்றப் போகும் ஒரு நபரை சந்தித்தார். 2011-ல் அந்த சந்திப்பு நடந்தது. பக்வந்த், சந்தித்த நபர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் சகோதரர் மகனும், அப்போதைய நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல்.
மன்பிரீத், ஆளும் கட்சியாக இருந்த அகாலி தளத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்ய திட்டமிட்டிருந்தார். பஞ்சாப்பில் ஆளும் அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாற்று அரசியல் சக்தி வேண்டும். அதற்கான முன்னெடுப்பில் இருப்பதாக கூறி, தான் ஆரம்பித்த பஞ்சாப் மக்கள் கட்சியில் பக்வந்த்தை வற்புறுத்தினார். அவரின் அழைப்பை ஏற்று பஞ்சாப் மக்கள் கட்சியில், நகைச்சுவை நடிகராக புகழின் உச்சியில் இருந்தேபோதே இணைந்துகொண்டார். "நகைச்சுவை மூலம் அரசியல் மற்றும் சமூக கருத்துகளை சொல்லி வருகிறேன். ஆனால், சேற்றை சுத்தம் செய்ய, சேற்றில் இறங்க வேண்டும். இதை உணர்ந்தே, தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன். அகாலியும், காங்கிரஸும் பஞ்சாப்பில் அதிகார வட்டங்களாக மக்களை நசுக்கி வருகின்றனர். பஞ்சாப்புக்கு இப்போது ஒரு மாற்று தேவை. இதைக்கொடுக்க எங்கள் கட்சி வாயிலாக நான் முயற்சிப்பேன்" என்று அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு முழுநேர அரசியல்வாதியாக ஸ்டேட்மென்ட் விட்டார்.
பஞ்சாப்புக்கு ஒரு மாற்று தேவை என்ற அவரின் கூற்றுக்கு காரணமாக இருந்த மன்பிரீத் சிங், விரைவாகவே பக்வந்த்தை கைகழுவியது. கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். அவர் எதிர்த்தது பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீந்தர் கெளர் பட்டலை. களப்பணியாற்றும் உத்வேகம் இருந்தாலும், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தோல்வியில் துவண்டு இருந்தவருக்கு மற்றுமொரு அடி. தேர்தலில் எந்த வெற்றியுமே பெறாததால், பஞ்சாப் மக்கள் கட்சியை மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸோடு இணைத்து அவரும் அங்கேயே ஐக்கியமாகிவிட்டார்.
தான் அரசியலில் சேர காரணமாக இருந்த மன்பிரீத் சிங் பாதலின் இந்த முடிவு பக்வந்த்தை அசைத்து பார்த்தது. ஆனாலும், பஞ்சாப்புக்கு மாற்று தேவை என்பதில் உறுதியாக இருந்த அவர், மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார். அரவிந்த் கேஜ்ரிவாலின் அழைப்பை ஏற்று ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதன்பின்னர் நடந்தவை அனைத்தும் வரலாறு. 2014-ல் பஞ்சாப்பில் புதிய கட்சியாக கால்பதித்த ஆம் ஆத்மியில் இணைந்த உடன் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தனது சொந்த தொகுதியான சங்ரூரில் களம் கண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை நரேந்திர மோடி அலைக்கு மத்தியிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார்.
இதே தொகுதியில் 2019 தேர்தலிலும் வென்று மீண்டும் மக்களவை உறுப்பினராக தேர்வானார். 2014 வெற்றி அவரை ஆம் ஆத்மியில் முக்கிய நபராகவும், கெஜ்ரிவாலின் நம்பிக்கையாகவும் நல்ல நண்பராகவும் ஆக்கியது. 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பக்வந்த் தோல்வியை தழுவினாலும், கட்சியில் அவருக்கு இருந்த செல்வாக்கு, கெஜ்ரிவாலின் நல்ல நட்பு ஆகியவை அவருக்கு கைகொடுத்தது. இதனால் 2017 தேர்தலுக்குப் பிறகு, பக்வந்த் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்றுவரை ஆம் ஆத்மியின் பஞ்சாப் முகமாக இருக்கும் அவர், சில மாதங்கள்முன் முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பக்வந்த் மான் மீது ஏராளமான சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மதுப்பழக்கம் அவரை நிறைய கேலிகளை சர்ச்சைகளை சந்திக்க வைத்துள்ளது. பல முறை குடித்துவிட்டு பொதுவெளியில் அவர் தள்ளாடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. சில ஆண்டுகள் முன் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, "இனி மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன்" என்று தனது தாயாரிடம் சத்தியம் செய்தார்.
இதுமட்டுமல்ல, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியை பிரிந்த விவகாரம் என பக்வந்த் மீது சர்ச்சைகள் ஏராளம். இந்த சர்ச்சைகளை தாண்டி கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம், அவரின் அரசியல் செயல்பாடுகள். கடந்த சில தேர்தல்களில் பக்வந்த் செயல்பாடுகளால் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. சில மாதங்கள் முன் நடந்த சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பக்வந்த்தின் சிறப்பான செயல்திறனால் நகரத்தில் உள்ள 35 வார்டுகளில் 14 வார்டுகளை வென்றது.
மேலும், கட்சியில் அவருக்கு நிறைய செல்வாக்கும் உள்ளது. ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஹர்பால் சீமாவும் கட்சியின் ஒரு முக்கியமான முகமாக இருந்தாலும், அரசியல் ரீதியாக முக்கியமான மால்வா பிராந்தியத்தில் (இந்த தேர்தலில் ஆம் ஆத்மி அதிக தொகுதிகளை வென்ற பிராந்தியம்) , குறிப்பாக கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பவர் பக்வந்த் மட்டுமே. இதனால் போட்டியாளர்கள் ஏதுமின்றி, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
பக்வந்த் மான் மீது ஆம் ஆத்மி அதிக நம்பிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அசத்தலான உரை நிகழ்த்துவதில் மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடையே பெயர் பெற்ற பக்வந்த் தேர்தல் அறிவித்த பிறகு, ''இந்த தேர்தல் உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்" என பகத் சிங் மீது சத்தியம் செய்துகொண்டு, பஞ்சாப் சுதந்திர போராட்ட வீரர்களின் ட்ரேட் மார்க் மஞ்சள் தலைப்பாகையை அணிந்துகொண்டு 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்துடன் ஆம் ஆத்மியின் அதிகார வேட்கையை வீதிவீதியாக பிரச்சாரம் செய்தார் பக்வந்த் மான்.
தேர்தலுக்கு முன்பாக ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருவதையும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது சொத்து மதிப்பு எப்படி குறைந்து வருகிறது என்பதையும் பிரச்சாரத்தில் பேசி மக்கள் மனதில் சென்டிமென்ட்டாலாக டச் செய்தார். இது மக்கள் மத்தியில் ரீச் ஆக, அரசியலில் அடியெடுத்து வைத்த 11 ஆண்டுகளில் முதல்வர் பதவியை வசப்படுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago