புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில் பாஜக பாய்ச்சலைக் காட்டி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று நாட்டிலேயே அதிகளவில் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கு எப்போதுமே மினி நாடாளுமன்றத் தேர்தல் என்ற அடைமொழியும் உண்டு. இத்தேர்தலில் பகல் ஒரு மனி நிலவரப்படி பாஜக 274, சமாஜ்வாதி 124, பகுஜன் சமாஜ் 1, காங்கிரஸ் 2 என்று முன்னிலை வகிக்கின்றன.
கோரக்பூர் தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட யோகி ஆதித்யநாத் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கரால் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக உத்தரப் பிரதேசத்தை தக்கவைக்கும் என்பதை அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே சுட்டிக் காட்டியிருந்தாலும் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. 5 மாநிலங்களில் 4-ல் முன்னிலை என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.
» பஞ்சாப் தேர்தலில் அம்ரீந்தர் சிங் தோல்வி: காங்கிரஸ் தலைவர்களும் தோல்வி முகம்
» ‘‘இன்குலாப்; மக்களுக்கு வாழ்த்துகள்’’- கேஜ்ரிவால் நெகிழ்ச்சி: ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து
முன்னதாக, கடந்த 2021 இறுதியில் அசாம், மேற்கு வங்கம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுகக்கும் ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக 15 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. ஒரு மக்களவைத் தொகுதியிலும் தோல்வி அடைந்தது. குறிப்பாக மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவில் பாஜகவுக்கு ஏற்பட்ட சறுக்கல் 2022 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று பேசப்பட்டது.
இந்நிலையில்தான் பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தார். ஆகையால் 5 மாநில தேர்தலுக்கு அஞ்சியே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் விமர்சித்தன.
ஆனால், கணிப்புகள், விமர்சனங்களை எல்லாம் தகர்த்து பாஜக தனது பாய்ச்சலைக் காட்டியுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டியது கோவா மாநில தேர்தல். கோவாவில் நிச்சயமாக தொங்கு சட்டசபை என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டின. ஆனால் அதையும் தவிடுபொடியாக்கியுள்ளது பாஜக.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம் பாஜகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்பட்டது. ஆனால் லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மா முன்னிலை வகிக்கிறார்.
உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தராகண்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை இருந்தது என்னவோ உண்மைதான். கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் மாறியிருந்தனர். 2017ல் ஆட்சி மாறி பாஜக வசம் வந்தது. திரிவேந்தர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக 3 ஆண்டுகள் 357 நாட்களில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு திராத் சிங் ராவத் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தாமி முதல்வராக இருந்தார். ஆனால் இத்தனை குழப்பத்துக்கும் இடையேயும் கூட மக்கள் மீண்டும் பாஜகவை தேர்வு செய்துள்ளனர்.
மணிப்பூரில் ஏற்கெனவே கணிக்கப்பட்ட படி பாஜக முன்னிலை பெற்று வருகிறது. ஏற்கெனவே திரிபுராவிலும் பாஜக ஆட்சி உள்ளது. 7 சகோதரிகள் எனப்படும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா என்பதைத் தாண்டி பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து மேம்பாட்டுக்கு பாஜக வித்திடுவதால் 7 சிஸ்டர்ஸின் கரிசனம் பாஜகவுக்கு இனியும் தொடரலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
5-ல் 4 மாநிலங்களில் பாஜக கண்டுள்ள இந்தப் பாய்ச்சலுக்கு ஒரே முக்கியக் காரணம் தான் வலுவான தலைமையற்ற காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியதே தங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று பாஜக சொல்கிறது.
2022 வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தீர்மானித்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தலைமையில்லா காங்கிரஸ்: தேசிய அளவில் இன்னும் இடைக்காலத் தலைவரை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. இனியும் காங்கிரஸ் தனது தலைமை யார் என்பதை அறிவிக்காவிட்டால் பின்னடைவையே சந்திக்க நேரிடும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரும் எச்சரித்துள்ளனர்.
தலைமைக்கான வெற்றிடத்தின் விளைவை 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்துள்ளது. பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் 300 இடங்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தாலும் கூட வெறும் 3 தொகுதிகளில் முன்னிலை என்ற சரிவிற்கு தலைமைப் பிரச்சினையே காரணமாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.
தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்; தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில் அவர் தலைமையை ஏற்பாரா என்ற கேள்விகள் கட்சிக்குள் மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டத்தில் பாஜகவை சேஃப் ஜோனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில், மம்தாவும் பிரசாந்த் கிஷோரும் கூறியது போல் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என்பதில்லை என்ற சூழலை காங்கிரஸ் தனக்குத் தானே வரவழைத்துள்ளது.
இதனிடையே, பஞ்சாப் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago