போர் தீவிரம்: கீவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்திய தூதரகம்

By செய்திப்பிரிவு

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் நேற்று கேட்டுக்கொண்டது. அந்நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியும் தீவிரமாக நடக்கிறது.

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உக்ரைன் சென்றுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போர் சூழலில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ் நகரில் மட்டும் சுமார் 2000 இந்தியர்கள் உள்ளனர்.

இதனிடையே கீவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முயற்சியின் பலனாக அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற சிறப்பு ரயில்களை உக்ரைன் ரயில்வே இயக்கத்தொடங்கியது. இந்தியத் தூதரகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் தங்கியிருந்த சுமார் 400 மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் சிறப்பு ரயில் மூலம் மேற்கு உக்ரைன் நோக்கிப் புறப்பட்டனர். இதுதவிர தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரில் இருந்து 1,400 மாணவர்கள் மேற்கு நோக்கிப் புறப்பட்டனர்.

என்றாலும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மாணவர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. இந்நிலையில் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதாக நேற்று செய்தி வெளியானது.

இதுகுறித்து இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில், “மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக கீவ் நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம். கிடைக்கக் கூடிய ரயில்கள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வழிகள் மூலமாகவோ வெளியேறுவது நல்லது” என்று கூறியிருந்தது.

இந்த அறிவுரையை தொடர்ந்து, கீவ் நகரில் எஞ்சியுள்ள இந்தியர்களை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் முயற்சிகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டது.

இதற்கிடையில் உக்ரைனில் இருந்து போலந்து நோக்கி வந்து,ஷெகினி எல்லைப் பகுதியில் காத்திருந்த இந்தியர்கள் போலந்தின் உட்புற நகரங்களுக்கு செல்ல அங்குள்ள இந்தியத் தூதரகம் பேருந்து வசதிகளை ஏற்படுத்தியது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று போலந்து பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போலந்தில் இருந்து நடைபெறும் மீட்புப்பணி குறித்து அவருடன் விவாதித்தார். உயர்மட்ட அளவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, போலந்தில் இருந்து நடைபெறும் மீட்புப் பணிகளை மேம்படுத்த உதவியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

போலந்து நாட்டுக்கான இந்தியத் தூதர் நக்மா மல்லிக், அந்நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து, இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் முயற்சிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்.

அமைச்சர் நம்பிக்கை:

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் போலந்தில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் வி.கே சிங் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். உத்தரவு வரும்வரை அதே இடத்தில் காத்திருங்கள். பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் நாடு உங்களை பத்திரமாக மீட்கும். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

பணம் கொடுக்காதீர்:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் ருமேனியா எல்லைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து தலைநகர் புகாரெஸ்டுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாகனத்தில் புகாரெஸ்ட் செல்ல இந்திய மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ருமேனியா எல்லையில் இருந்து புகாரெஸ்டுக்கு மாணவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 நாட்களில் 26 விமானங்கள்:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனிலிருந்து தப்பி ருமேனியா, மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிருங்லா நேற்று கூறும்போது, “உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர அடுத்த 3 நாட்களில் 26 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்