நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமர் மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள்

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார், இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார். இதனையடுத்து அவர் பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி நிரலில் பிரதமர் மோடி உரை இல்லாத போதும் மோடி எழுந்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தாக்கூர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக் கேட்பதெல்லாம், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்த வேண்டாம். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டு நீதிபதிகள் அதிகமாக, கடினமாக உழைக்கிறார்கள். பல விஷயங்களில் உயர்ந்து நிற்கிறார்கள்.

நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள்... சிறையில் வாடும் ஏழை வழக்காளிகள், (இதனைக் கூறும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு குரல் உடைந்தது) ஆகியோருக்கு மட்டுமல்லாது..நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன், நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.

நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் உணர்ச்சிகர முறையீடு உதவும் என்று நான் உணர்கிறேன். உயர் நீதிமன்றங்களில் 454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவே உள்ளன. இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி) வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.

இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தோம். 50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம், காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே. ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

‘மக்கள் தொகைக்கேற்ற நீதிபதிகள் விகிதாசாரம் இல்லை’

கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு 10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும், மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான் துவக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது. எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல் நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை. மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர். இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச் செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது. அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தம் நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.

இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில் விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இவ்வாறு பேசி முடித்தார் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்.

இவர் பேசி முடித்து அமர்ந்தவுடன் பிரதமர் மோடி உறுதி அளித்த போது, “நம் அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.

அரசும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து வலுவான எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டுமே தவிர, 1987-ல் கூறியது என்று கடந்த காலத்தில் உழல்தல் கூடாது.

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில் சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்