உத்தரப் பிரதேச தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 12 மவாட்டங்களில் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவாகியுள்ளது. இது கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதிகளில் காலை 9 மணிக்கு பதிவான வாக்கு சதவீதத்தைவிட 2.3% குறைவாகும்.

கவனம் பெறும் அயோத்யா: முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி.சிங், ராஜீவ் காந்தி, அட்டல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் அப்பட்டியலில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 12 மாவட்டங்களில் மத்திய மற்றும் அவத் பகுதி தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக அயோத்யா தொகுதி இன்று வாக்குப்பதிவு காண்கிறது. பாஜக எம்எல்ஏ விபி குப்தா இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் பவன் பண்டே போட்டியிடுகிறார். 2012ல் இதே தொகுதியில் பவன் பாண்டே 5 முறை பாஜக எம்எல்ஏவை வீழ்த்தி ஜயன்ட் கில்லர் என்ற அடைமொழியைப் பெற்றார்.

இதேபோல் அலகாபாத் இப்போது பிரயாக்ராஜ் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு அனைத்து சமூகத்தையும் சார்ந்த மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இளைஞர்கள் வாக்கு இங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸின் கோட்டையான அமேதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கடந்த 2017 தேர்தலில் 61 தொகுதிகளில் 50 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால் இந்த முறை சமாஜ்வாதி கட்சி புத்துணர்வுடன் களமிறங்கியுள்ளதால் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.கடந்த பிப். 23ல் 4 ஆம் கட்ட தேர்தல் நடந்தது. அத்துடன் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 231 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

களத்தில் பிரபலங்கள்: இன்று களத்தில் உள்ள பிரபலங்களில் துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அப்னா தளம் வேட்பாளர் பல்லவி படேல் களம் காண்கிறார். சித்தார்த் நாத் சிங் அலகாபாத் மேற்கு, பிரதாப்கர் தொகுதியில் மோடி சிங், அலகாபாத் தெற்கில் நந்த் கோபால் குப்தா நந்தி, ராமாபதி சாஸ்திரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE