உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதலே இந்தியாவும் பதற்றத்தில் உள்ளது. காரணம், அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக 20,000 மாணவர்களை மீட்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் அங்கு படித்து வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இத்தனை பெரும் எண்ணிக்கையிலான இந்திய, தமிழக மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக எதற்காக உக்ரைனைத் தேர்ந்தெடுத்தனர் என்ற கேள்வி பரவலாக எழுகிறது.
இந்திய மாணவர்கள் ஏன் உக்ரைன் சென்றனர்? - 'ஸ்டடி இன் உக்ரைன்' என்ற இணையதளத்தில் உள்ள தகவலின்படி, உக்ரைனுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்வி பயிலவே வருகின்றனர். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதல் காரணம், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயில மிகவும் கட்டணம் குறைவு. 2-வது காரணம், அங்கு பெறும் மருத்துவச் சான்றிதழ் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவக் கவுன்சில்களால், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் மருத்துவக் கவுன்சில்களால் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், உக்ரைனில் மருத்துவம் பயின்று சான்றிதழ் பெற்ற பின்னர் அங்கேயே நிரந்தரக் குடியுரிமை பெறவும், பிற ஐரோப்பிய நாடுகளில் மருத்துவராகப் பணிபுரியவும் வாய்ப்பு அதிகம். மருத்துவம் தவிர, உக்ரைனில் பொறியியல் படிப்புகள் பயிலவும் இந்திய மாணவர்கள் அதிகம் சென்றுள்ளனர்.
உக்ரைனில் எவ்வளவு இந்திய மாணவர்கள் உள்ளனர்? - உக்ரைன் கல்வி, அறிவியல் அமைச்சக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கணக்கின்படி, உக்ரைனில் மொத்தம் 20,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 18,000 பேர் இந்திய மாணவர்கள். மொத்தமாக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 76,000 மாணவர்கள் உக்ரைனில் கல்வி பயில்கின்றனர். போர்ப் பதற்றம் தொடங்கியதிலிருந்து 4,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டனர். இப்போது 16,000 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.
» பிஹாரில் கூட்டணி, உ.பி-யில் பாஜக எதிர்ப்பு: முகேஷ் சஹானியின் இருவேறு அரசியல்
» உக்ரைன் போரை நிறுத்த உலகின் ஒரே நம்பிக்கை மோடி ஜி தான் - உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமா மாலினி
முதல் விமானம் மும்பை வருகிறது: இரண்டு நாட்களுக்கு முன்னரே நடைப் பயணமாகவும், கார் மூலமாகவும் அண்டை நாடுகளில் சில இந்தியர்கள் தஞ்சமடைந்தனர். அந்த வகையில் தஞ்சமடைந்தோர் முதல்கட்டமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். மற்றொரு விமானம் ருமேனியா செல்கிறது.
இதற்கிடையில், பிப்.26 தேதியிட்டு வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், ’உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளின் எல்லை வரை இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு செல்வதில் புதிதாக பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஆகையால் தூதரக அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதல்கள் வராமல் எக்காரணம் கொண்டும் எல்லை நோக்கிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.
இப்போதைக்கு இருக்கும் இடத்திலேயே இருப்பது பாதுகாப்பானது. உக்ரைனின் மேற்குப் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு, தண்ணீர் வசதியுடன் உறைவிடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது. எல்லை செக் பாயின்ட்டுகளை இந்தச் சூழலில் அடைய முயற்சி செய்ய வேண்டாம். உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்தியர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும். அமைதி காக்கவும். கையில் இருக்கும் உணவு, தண்ணீரைக் கொண்டு நிலைமையை சமாளிக்கவும். தேவையற்று வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முன்னெடுப்புகள்: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக மீட்டு வரக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளதாக திமுக தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
உக்ரைனில் நிலவி வரும் போர்ச் சூழலில் 5000-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வரக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, அக்கடிதத்தினை மேற்கோள் காட்டி, மத்திய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு உக்ரைனிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமானஆர்.எஸ். பாரதி, வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கு ஆகும் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கத் தயார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதையும் மத்திய அரசுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எழுதியுள்ள இக்கடிதத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முதல்வர் மிகுந்த கவலை அடைந்திருப்பதையும்; மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago