திருப்பதி ஏழுமலையான் உருவத்தை காகித கூழில் செய்து அசத்திய மாணவர்

திருப்பதி: திருப்பதியில் உள்ள  வெங்கடேஸ்வரா ஜூனியர் கல்லூரியில் அனந்தபூர் மாவட்டம், கதிரியை சேர்ந்த மதுசூதன் என்பவரின் மகன் ஓம்கார் (17) படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதிலும், பழைய காகிதங்களை கொண்டு அதனை கூழாக்கி கடவுள் படங்களை தத்ரூபமாக செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். அதன்படி, தற்போது ஓம்கார், சில மாதங்களாக பழைய செய்தித் தாள்களைக் கொண்டு, அதனை கூழாக்கி, அதில் 3 அடி உயரமுள்ள ஏழுமலையான் வெங்கடேச பெருமாள் உருவத்தை உருவாக்கினார். அந்த 3 அடி உயர பெருமாள் காகித சிலையை, அந்த மாணவர் நேற்று மாலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்த இணை நிர்வாக அதிகாரி (மருத்துவ மற்றும் கல்வி) சதா பார்கவியிடம் காண்பித்தார்.

இதனை பார்த்து அவர் மிகவும் ஆச்சர்யமடைந்தார். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறி, மாணவர் ஓம்காரை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். வரும் பிரம்மோற்சவத்தின்போது, புகைக்கப்பட கண்காட்சி அரங்கில் இந்த 3 அடி உயர காகித பெருமாள் சிலையையும் வைக்கும்படி அப்போது அவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE