பரஸ்பரம் புகழ்ந்து பேசிய அமித் ஷா, மாயாவிதி: உ.பி.யில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4 கட்ட தேர்தல்கள் நடந்துவிட்டன. இன்னும் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், மாயாவதியை அமித் ஷாவும் பரஸ்பரம் புகழ்ந்து பேசியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

முன்னதாக, அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குன்றிவிடவில்லை" எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அதனைச் சுட்டிக்காட்டி மாயாவதியிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மாயாவதி, "என்னைப் பற்றிய அவரது கருத்து உண்மைக்கான அங்கீகாரம். அதை அவர் உரக்கச் சொன்னது அமித் ஷாவின் பெருந்தன்மை. ஆனால், இதுவரை மூன்று கட்டத் தேர்தல் நடந்துள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலித்துகளும், சிறுபான்மையினரும் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கு உயர் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வாக்களித்துள்ளனர். பாஜக, இத்தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவோம் எனக் கூறுகிறது. ஆனால், இதற்கு காலம்தான் பதில் சொல்லும். பாஜக, சமாஜ்வாதிக்குப் பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியும் கூட வெற்றி பெறலாம் அல்லவா?" என்றார்.

முன்னதாக இன்று காலையில் லன்னோவில் வாக்களித்த அவர், "முஸ்லிம் மக்கள் சமாஜ்வாதிக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமாஜ்வாதி கட்சியின் மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். சமாஜ்வாதிக்கு வாக்களித்தால் அது குண்டர் ஆட்சி, மாஃபியா ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்களுக்குத் தெரியும். சமாஜ்வாதி ஆட்சியில்தான் மாநிலத்தில் பல கலவரங்கள் நடந்தன. ஆகையால் மீண்டும் அந்த ஆட்சி அமைய மக்கள் விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

உத்தரப் பிரதேசத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே மாயாவதி அடக்கிவாசிப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன. மாயாவதியின் மவுனம் ஆச்சர்யமளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த மாயாவதி, "காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்களின் உரிமையை வீணாக்க வேண்டாம். மாறாக, ஒருமனதாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாங்களிக்கலாம். உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். அதை காங்கிரஸால் செய்ய முடியாது. காங்கிரஸ் வாக்குகளை சிதறடிக்கும் கட்சியாகவே உள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ், சமாஜ்வாதியை சரமாரியாக விமர்சிக்கும் மாயாவதி அமித் ஷாவைப் புகழ்வதும், பாஜக மீது சற்றே மென்மையான விமர்சனங்களை முன்வைப்பதும் அங்கு தேர்தலுக்குப் பின் கூட்டணி அமையுமா என்ற ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

300-ஐ கடந்த வெற்றி என்று பாஜக கூறிவந்தாலும், இத்தேர்தலில் சவால் கடுமையாக இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று பாஜகவும் பகுஜன் சமாஜ் மீது அக்கறை காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE