கன்னட திரைப்படத்தில் நடிக்கும் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான‌ எடியூரப்பா (77) 'தனுஜா' என்ற கன்னட திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஹள்ளி கூறியதாவது:

எடியூரப்பா முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார். அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த‌ மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'தனுஜா' படத்தை இயக்கி வருகிறேன். கதை பிடித்து இருந்ததால் உடனடியாக நடிக்க எடியூரப்பா ஒப்புக்கொண்டார். அண்மையில் எடியூரப்பா சம்பந்தமான காட்சிகளை பெங்களூருவில் உள்ள‌ குமராகிருபா அரசினர் விருந்தினர் மாளிகை, முதல்வர் இல்லமான 'காவிரி' ஆகியவற்றில் படமாக்கப்பட்டது. எடியூரப்பா சிறப்பான முறையில் நடித்தார்.

இவ்வாறு ஹரீஷ் ஹள்ளி தெரிவித்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கவிதா லங்கேஷ் இயக்கிய படத்தில் 'சம்மர் ஹாலி டே' படத்தில் முதல்வராக நடித்தார். அந்த திரைப்படம் வெளியாகவில்லை. முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரும் தலா ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி ஏராளமான‌ கன்னட திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும், ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE