பஞ்சாப் தேர்தல்: 1 மணி வரை 34.10 % வாக்குப்பதிவு: பாதல், சித்து வாக்களிப்பு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 34.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பஞ்சாபில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல நகரங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஜலந்தர் உள்ளிட்ட நகரங்களில் காலையில் வாக்கப்பதிவு சற்று மந்தமாக இருந்தநிலையில் பின்னர் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 1 மணி வரை 34.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சிரோண் மணி அகாலிதள கட்சித் தலைவர்கள் பாதல், சுக்பீர் சிங் பாதல், சிம்ரன்ஜித் கவுர், முதல்வர் சரண்ஜித் சன்னி, சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், ஆம் ஆத்மியின் பகவந்த் மான், அம்ரீந்தர் சிங் உட்பட பாஜக கூட்டணி தலைவர்களும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவு கிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதா களமிறங்கியிருப்பதால் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை காங்கிரஸ் வாக்கு வங்கி அவருக்கு கிடைக்காது என்பதால் அவரது வெற்றி வாய்ப்பு சவாலாகி உள்ளது.

அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2012, 2017 தேர்தல்களில் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெரோஸிபூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதால் ஜலாலாபாத் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் சிங்குக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

முன்னாள் முதல்வரும் அகாலி தளத்தின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (94), லம்பி தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். வயது முதுமை காரணமாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்த தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE