'ஹிஜாப் தடை, குர்ஆனை தடை செய்வதற்கு சமம்' - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: "ஹிஜாப் பிரச்சினை ஏழை இஸ்லாமிய பெண்களின் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. ஹிஜாப்பை தடை செய்வது குர்ஆனை தடை செய்வதற்கு சமம்" என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை மூன்றாவது நாளாக இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்த விசாரணையில் மாணவிகள் தரப்பு வாதங்கள் நடந்துவருகின்றன. இன்றைய நிகழ்வில் மாணவிகள் தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் வினோத் குல்கர்னி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அதில், "ஹிஜாப் பிரச்சினை ஏழை இஸ்லாமிய பெண்களின் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. ஹிஜாப்பை தடை செய்வது குர்ஆனை தடை செய்வதற்கு சமம்" என்று தொடங்கினார். அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, "உங்களுக்கு ஹிஜாப்பும் குர்ஆனும் ஒன்றுதானா" என்று கேள்வி எழுப்ப, அதற்கு வினோத் குல்கர்னி, "எனக்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் அப்படிதான். நான் ஒரு பக்தியுள்ள இந்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன். அதேநேரம் குர்ஆன் உலகம் முழுவதும் உள்ள முழு இஸ்லாமிய சமூகத்திற்கும் பொருந்தும். குர்ஆனை புறக்கணிக்க முடியாது. ஹிஜாப் பொது ஒழுங்கிற்கு எதிரானது அல்ல. இந்த விவகாரம் தனிநபர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஒருவரின் மனரீதியான ஆரோக்கியத்தை காப்பது அரசு நிர்வாகத்தின் கடமை. வழக்கு முடியும் வரை இஸ்லாமியர்களுக்கு புனிதமான நாளான வெள்ளிக் கிழமைகளில் மட்டுமாவது ஹிஜாப் அணிய அனுமதித்து இடைக்கால உத்தரவு போட வேண்டும்" என்று வாதிட்டார்.

குல்கர்னியை தொடர்ந்து ஒரு சமூக ஆர்வலர் சார்பாக வழக்கறிஞர் ரஹமுதல்லா கோத்வால் என்பவர் வாதாடத் தொடங்கினார். ஆனால், அவரின் மனுவில், பொது நல வழக்குகள் தொடர்பான உயர் நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் "இவ்வளவு முக்கியமான மற்றும் தீவிரமான விஷயத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்" என்று தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி காட்டினர். அடுத்ததாக வாதாடிய வழக்கறிஞர் சுபாஷ் ஜா, "மத்தியஸ்தம் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு, "அரசியலமைப்புச் சிக்கல்கள் இதில் அடங்கியுள்ளன. அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். எனவே இதில் மத்தியஸ்தம் செய்ய முடியாது." என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக நேற்றைய விசாரணையில், தனது வாதத்தில் ரவிவர்ம குமார், "வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது எனத் தெரியவில்லை. கூங்காட் அனுமதிக்கப்படுகிறது, வளையல்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஹிஜாப்புக்கு மட்டும் தடை. கிறிஸ்தவர்களின் சிலுவையை, சீக்கியர்களின் தலைப்பாகையை ஏன் தடை செய்யக்கூடாது? கர்நாடகாவில் மற்ற மதங்களின் அடையாளங்கள், சின்னங்கள் தடை செய்யப்படவில்லை. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா கல்வி விதிகள், 1995 விதிப்படி, ஒரு கல்வி நிறுவனம் சீருடையை மாற்ற நினைக்கும்போது, ​​ஓராண்டுக்கு முன்னதாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அதேபோல், சட்டத்தின் கீழ் எந்த ஒரு சீருடையையும் பரிந்துரைக்கவில்லை என்பதால், ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை. எனவே, எந்த அதிகாரத்தின் கீழ் ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகள் வெளியே நிறுத்தப்பட்டார்கள் என்பதுதான் எனது கேள்வி. இந்தச் செயலுக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

ஹிஜாப் அணிவதை தடை செய்து அரசாணை பிறப்பித்தது கல்லூரி மேம்பாட்டுக் குழு. பொதுவாக இந்தக் குழுக்கள், மாணவர் நலன் அல்லது மாணவர்களின் ஒழுக்கத்தைக் கையாள்வதற்காக அமைக்கப்படுவது கிடையாது. மாறாக, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமே இத்தகைய குழுக்கள் அமைக்கப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முழக்கமாக இருக்க வேண்டும். மேலும் பன்மைத்துவம் காக்கப்பட வேண்டும். தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் ராணுவத்தில் இருக்க முடியும் என்றால், தங்கள் சொந்த மத அடையாளங்களை கொண்ட ஒருவரை ஏன் பள்ளி, கல்லூரி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது? இஸ்லாமிய பெண்களை வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அவர்களின் கல்விக்கே அழிவை ஏற்படுத்தும்" என்று வாதிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE