திருப்பதியில் ரூ.1.50 கோடிக்கு உதயாஸ்தமன சேவை டிக்கெட்: தேவஸ்தானம் வெளியிட்ட 1 மணி நேரத்தில் ரூ.70 கோடிக்கு பக்தர்கள் முன்பதிவு

By செய்திப்பிரிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை பக்தர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த டிக்கெட் ஆன்லைனில் வெளியான ஒரு மணி நேரத்தில் ரூ.70 கோடி வரை கட்டணம் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த டிக்கெட்டின் விலை ரூ.1.50 கோடியாகும். மற்ற சாதாரண நாட்களில் இதே டிக்கெட்டின் விலை ரூ.1 கோடியாக கட்டணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்துள்ளது. இந்த சேவா டிக்கெட்டுகளை பெற்ற பக்தர், தனது குடும்பத்தாருடன் (மனைவி, பிள்ளைகள் மட்டும்) திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தினசரி நடைபெறும் காலை சுப்ரபாத சேவை முதற்கொண்டு, தொடர்ந்து இரவு ஏகாந்த சேவை நடைபெறும் அனைத்து சேவைகளையும் அருகில் இருந்து ஒரு விஐபி பக்தரை போல் கண்டு களிக்கலாம்.

புற்றுநோய் மருத்துவமனை

மேலும், தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்களும், தங்குவதற்கான வசதியும் செய்து தரப்படும். இதுபோன்று, அந்த பக்தர், தனது வாழ்நாளில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை இந்த உதயாஸ்தமன சேவையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை வீதம் பங்கேற்கலாம். இப்படி வசூல் ஆகும் கட்டணத்தில், திருப்பதியில் குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவமனையை ரூ.600 கோடி செலவில் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. கோயிலுக்கு அதிக அளவில் காணிக்கை செலுத்தும் பக்தர்கள், இந்த அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி அல்லது ரூ.1.50 கோடி வழங்கினால், அவர்களுக்கு தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை இந்த உதயாஸ்தமன சேவை காணும் பாக்கியம் கிட்டும்.

இதற்கான ஆன்லைனில் 38 டிக்கெட்டுகளை நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணைய தளத்தில் வெளியிட்டது. வெளியிட்ட வெறும் 1 மணி நேரத்தில், வரும் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து போனது. மேலும் இந்த மாதத்தில் சில நாட்களுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் வெறும் ஒரு மணி நேரத்தில் ரூ.70 கோடி வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE