மாற்றத்துக்கு பஞ்சாப் மக்கள் தயாராகிவிட்டனர்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பதான்கோட்: மாற்றத்துக்கு பஞ்சாப் மக்கள் தயாராகிவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனைப்போட்டி நிலவு கிறது. 3 கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பதான்கோட் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பஞ்சாப் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாகும். அதே சமயம் எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. கேப்டன் அமரீந்தர் சிங்காங்கிரஸில் இருந்தபோது தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தினார். இப்போது அவரும் இல்லை.

காங்கிரஸ் அசல் என்றால் ஆம் ஆத்மி கட்சி அதன் பிரதியாகஉள்ளது. ஒருவர் பஞ்சாபை கொள்ளையடித்தார். மற்றொருவர் டெல்லியில் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டாலும், சண்டையிடுவதுபோல் விளையாடி வருகின்றனர். ஒருவருக்கொருவர் எதிரியாக நடித்து வருகின்றனர்.

எங்கெல்லாம் பாஜக தன்னைநிறுவிக் கொள்கிறதோ அங்கெல்லாம் ரிமோட் கன்ட்ரோல் குடும்பம் (காங்கிரஸ் கட்சி) அழிக்கப்பட்டது. எங்கு அமைதி நிலவுகிறதோ அங்கெல்லாம் சண்டை போட்ட கட்சிகளுக்கு, சமாதானத்துடன் விடை கொடுக்கப்படுகிறது. பஞ்சாபிலும் அதே நிலையில் காங்கிரஸை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

கரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது.

2016-ல் பதான்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தோம். ஆனால் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் அவமதிக்கிறது. இழிவுபடுத்தி வருகிறது.

தாக்குதல் தொடர்பாக அரசு, பஞ்சாப் மக்கள், நமது ராணுவத்தை நோக்கி கேள்விக்கணைகளை காங்கிரஸ் எழுப்பியது. பதான்கோட் பதில் தாக்குதலுக்கு ஆதாரத்தைக் கொடுங்கள் என்று கேட்டு ராணுவத்தை இழிவுபடுத்தினர். புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும்போதும் ராணுவத்திடம் அவர்கள் இதே கேள்வியை எழுப்பினர்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மனப்போக்கை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். பஞ்சாப் மக்கள் இந்த முறை மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர்.

பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா சாலைத் திட்டத்தை சிறப்பாக அமைத்து பஞ்சாப் மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.

1965-ல் கர்தார்பூர் குருத்வாராவை மீட்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதுமுயற்சி எடுத்திருந்தால் கர்தார்பூர் இப்போது நம் வசம் இருந்திருக்கும். பஞ்சாப் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்று வர்த்தகத்தையும், தொழில் துறையையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

இன்று ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. எனவே இங்கு வருவதற்கு முன்பு நான் குரு ரவிதாஸ் விஷ்ரம் மந்திருக்கு சென்று அவரது ஆசிகளைப் பெற்று வந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE