ஹிஜாப், பாலியல் வன்கொடுமை | முற்போக்கு சிந்தனைகளை வளர்ப்பீர் - காங். எம்எல்ஏவுக்கு கர்நாடக அமைச்சர் அறிவுரை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: "முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுக்கு, அம்மாநில பாஜக அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, "பெண்கள் ஹிஜாப் அணிவதைத் துறந்ததாலேயே இந்தியாவில் பாலியல் வன்கொடுமை விகிதம் அதிகரித்துள்ளது" எனப் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனைக் கண்டித்துள்ள கர்நாடக மாநில உயர்க்கல்வி அமைச்சர் சி.என்.அஷ்வந்த் நாராயண், "இதுபோன்ற மனநிலையை மாற்றிக் கொண்டு முற்போக்கான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில் "ஹிஜாப் மட்டுமல்ல ஆடைக்கும் பெண்ணின் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. அதனால் இதுபோன்ற புரிதலற்ற அறிக்கைகளுக்கு முன்னர் யோசித்துப் பேச வேண்டும். மதிப்பீடுகளின் அடிப்படையில் கலாச்சாரத்தை கட்டமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை முன்வைத்து ட்விட்டரில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில், "நீங்கள் பெண்கள் பிகினி, ஹிஜாப், ஜீன்ஸ் என எதை வேண்டுமானாலும் அணியலாம். அது அவர்களின் விருப்பம் என்று கூறினீர்கள் ஆனால் உங்கள் கட்சி எம்எல்ஏ ஜமீர் அகமது ஹிஜாப் அணியாமல் இருந்தால் பாலியல் வன்கொடுமை நடக்கும் எனக் கூறுகிறார். இது பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள். அவரின் பேச்சு காங்கிரஸின் மனநிலையைக் காட்டுகிறது" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜமீர் அகமது, ”ஹிஜாப் அணியச் சொல்வதில் காரணம், பெண்களின் அழகை மறைக்க வேண்டும், அதை கடைவிரிக்கக் கூடாது” என்று பேசியிருந்தார்.

தனது கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் ஜமீர் அகமது கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை அறிந்து நான் அச்சமடைந்துள்ளேன். அந்தப் பதற்றத்தில்தான் நான் புர்கா, ஹிஜாப் அணிந்தாலாவது பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கலாம் என்றேன். அது யாரையும் குறிவைத்து அவமதிக்கும் நோக்கத்தில் கூறப்பட்டதில்லை. நான் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE