புதுடெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி என்.வி.என் சோமு இன்று மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், மத்திய அரசின் திட்டங்களையும், தமிழக அரசின் திட்டங்களையும் ஒப்பிட்டு கடுமையாக சாடினார்.
அவர் தனது பேச்சில், "கரோனா பேரிடரின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் வகையிலான நிதிக்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலை எதிர்பார்த்தோம். ஆனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நடுத்தர வர்க்கத்தினரின் நிதிநிலையை சரிசெய்யும் எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளில் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை மட்டுமே மாறாத விஷயமாக இருக்கிறது. அதைச் சரிசெய்ய வேண்டிய நிதியமைச்சர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வெற்றுத் திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே மகிழ்ச்சி கொள்கிறார்.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்... வானமேறி வைகுண்டம் போனானாம்’ என்ற பழமொழியின் அர்த்தம் நிதியமைச்சருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். கரோனா பேரிடர் இன்னும் தொடர்ந்துகொண்டுள்ள இந்த நேரத்தில் மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவராக இருக்கும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாநிலங்களில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களிடையே உள்ள விழிப்புணர்வு காரணமாக கரோனா மரணங்கள் வெகுவாக குறைந்திருக்கிறது. ஆனால் பிற நோய்களின் காரணமாக மருத்துவ செலவு என்பது மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்த நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்காவது மருத்துவத்துறைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கினால்தான் 140 கோடி மக்களுக்கும் சுகாதாரமான வாழ்வை உறுதிசெய்ய முடியும்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் இழக்க வேண்டி இருந்தது. இந்த நிலையை சரிசெய்ய பி.எம் கேர் நிதி மூலமாக நாடு முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மருத்துவத் தேவைக்கென மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர நினைக்கும் போது, அதற்கான பிரீமியம் கட்டணம் பெரும் சவாலாக இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதத்தினர் அதாவது 56 கோடி பேர் மருத்துவ காப்பீடு வசதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
காரணம் அதற்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரி! இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு எடுக்கவே குறைந்தது 18 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. எனவே தரமான மருத்துவ வசதியை எல்லோரும் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுக்கான வரியைக் குறைப்பதுடன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கான வரியையும் கணிசமாகக் குறைக்க வேண்டும். மருத்துவ ரீதியாக அபாயகரமான சூழலில் நாடு இருக்கும் போது, மருத்துவத் துறைக்கு அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் தமிழகத்தைப் பாருங்கள்.... முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த முன்னோடித் திட்டங்களால், தரமான இலவச மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கிறது. ஒரு பைசாகூட பாக்கெட்டில் இல்லாமல் ஒரு நோயாளி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து இலவசமான, தரமான சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வெளியே வரும் மகத்தான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலையை எட்டிய முதல் மாநிலம் தமிழகம்தான் என்பதை நான் பெருமையோடு சொல்ல முடியும். இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து, ஏழை எளிய மக்கள் தரமான இலவச சிகிச்சை பெறக் காரணமாக இருந்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.
அவர்தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்தார். அவர் அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து அமல்படுத்திய போது ஒன்றிய அரசு அதுபற்றி சிந்திக்கக்கூட இல்லை என்ற உண்மையையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1972ல் இலவசக் காணொளித் திட்டத்தை அறிமுகம் செய்து, ஏழை மக்கள் இலவசமாக கண் சிகிச்சை பெற வழிவகுத்தவரும் அவர் தான். அதன்பிறகுதான் அந்தத் திட்டத்தின் உன்னதத்தை உணர்ந்த ஒன்றிய அரசு, பார்வையிழப்பைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்தியது.
மருத்துவத் துறை உட்கட்டமைப்பிலும், சிகிச்சை வசதிகளிலும் தமிழகம் இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது. மருத்துவர் - நோயாளி விகிதாச்சாரம், மருத்துவப் படுக்கை வசதி - நோயாளிகள் எண்ணிக்கை விகிதாச்சாரம், குறிபிட்ட மக்கள்தொகைக்கென ஆரம்ப சுகாதார நிலையம் என எந்த அளவுகோலை எடுத்து․ பார்த்தாலும் தமிழகன்தான் முதல் மாநிலமாக இருக்கிறது. திராவிடக் கட்சியின் ஆட்சிதான் அதற்கு காரணம் என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
2015ம் ஆண்டு முதலே தோல்வியடைந்த மற்றும் பொய்யான வாக்குறுதிகளைக் கொண்ட மூட்டையாகவே ஒன்றிய அரசின் பட்ஜெட் இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த அரசு சொல்லிவந்ததபடி, 2022க்குள் அனைவருக்கும் வீடு... 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்... நதி நீர் இணைப்பு, சிறு தொழில் துவங்க 59 நிமிடங்களில் ஒரு கோடி கடன் பெறும் வசதி, 2022க்குள் 175 ஜிகாவாட் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி என அத்தனையும் இப்போதும் நிறைவேறாத கனவாகவே இருக்கின்றன.
2022க்குள் அனைவருக்கும் வீடு என்று 2015ம் ஆண்டு சொல்லிவிட்டு இந்த ஆண்டுதான் 80 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை நிறைவேற்றுவதற்குள் தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு கோடிகள் உயரும். இதுதான் எல்லா திட்டங்களின் நிலையும்!குடிசை வீடுகளை ஒழித்து ஏழைகள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை 1970ல் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்து அமல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதுமட்டுமல்ல சாதிய வேறுபாடுகளைக் களையும் வண்ணம், அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் குடியிருக்கும் வகையில் தலா 100 வீடுகளைக் கொண்ட சமத்துவபுரங்களை உருவாக்கி புரட்சி படைத்தவரும் அவரே. இதுவரை 145 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்க․பட்டுள்ளது. வேறு எந்தத் தலைவரும் இப்படியொரு திட்டத்தை சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.
இந்தத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தினால், மக்களிடையே சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்ட முடியுன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒன்றிய அரசு இனிமேலாவது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திட்டங்களை ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பிஜேபி அரசு பதவிக்கு வந்த பிறகு, பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட்டை இணைத்தது. அந்த நாள் முதலே ரயில்வேக்கான முக்கியத்துவமும் குறைந்துபோனது என்பதுதான் உண்மை. முன்னாள் பிரதமர்கள் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை அத்தனை பேரும் 67 ஆண்டுகள் பாடுபட்டு இந்திய ரயில்வேயை உலகின் மிகப்பெரிய சேவையாக உருவாக்கினார்கள்.
ஆனால் இப்போதைய பிரதமரோ மிகக் குறுகிய காலத்தில் ரயில்வேயின் தரத்தை, அதன் உன்னதத்தைக் குறைத்துவிட்டார். ரயில் வழித்தடங்களை லாப நோக்கில் செயல்பட்டு தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் இந்திய ரயில்வேயை இருகூறாகப் பிரிக்க முனைந்திருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கும். ஒன்று பணக்காரர்களுக்கானது; இன்னொன்று ஏழைகளுக்கானது. காலனி ஆதிக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்த நிலையைத்தான் ஒன்றிய அரசு விரும்புகிறதா? இந்திய ஒற்றுமையின் சின்னமாக விளங்கும்
ரயில்வேயை அதன் இயல்பிலேயே வைத்துப் பாதுகாக்கும் பணியை செய்வதுதான் ஒன்றிய அரசின் தலையாக கடமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன்மூலம் நாட்டில் சமூக ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் ஒன்றிய அரசு அணுகுகிறது. தமிழகத்தில் 11 ரயில்வேத் திட்டங்களுக்கு 59 கோடியை ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, வடக்கு ரயில்வே பிராந்தியத்தில் 14 திட்டங்களுக்கு சுமார் 19 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இது ஏற்புடையதல்ல.
இறுதியாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... தமிழ்நாடுதான் இந்தியா... இந்தியாதான் தமிழ்நாடு. தமிழகம் முன்னேறினால் இந்தியாவும் முன்னேறும். கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு, வருவாய் வாய்ப்புகள், தொழில்வளர்ச்சி, மருத்துவ வசதி, சமூக நீதி, மத நல்லிணக்கம் என அத்தனை விஷயங்களிலும் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்திற்குரிய நிதியோ திட்டங்களோ உரிய அளவுக்கு தரப்படுவதில்லை. இதைத்தான், எங்கள் தலைவர்கள் 1960 களிலேயே ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று சொன்னார்கள். அந்த நிலை இன்னும் தொடர்கிறது என்பதுதான் வேதனையான உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago