‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம்  இருக்குமா? - நவாஸ்கனி கேள்வி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அதில் அவர், ‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம் இருக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது:

இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

கார்ப்பரேட்டுகளின் மீதான அக்கறை உயர்ந்து கொண்டே செல்வதையும், அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தின் மீதான அக்கரை அகல பாதாளத்தில் சரிந்ததையும் இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை குறை கூறுவதிலேயே பிரதமர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்களை தான் தற்போது விற்பனை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை பிரதமர் மறந்து விட்டார்.

‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத்தவிர ஏதாவது சாதனை இந்த அரசிடமிருந்து இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் அவற்றுக்கெல்லாம் ஏமாற்றமளிக்கும் அளவிற்கு அரை நூற்றாண்டு கால தேசத்தின் சொத்துக்களை, பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விற்பனையை தவிர்த்து, ஏதாவது ஒரு பொதுத்துறை நிறுவனத்தையாவது உருவாக்குவோம் என்ற எண்ணமே வராதது தான் இந்த அரசின் சாதனை.

பிரதமர் கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார் என்பதை விளக்குவாரா?

விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர், நடுத்தர மக்கள் என அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை தரக்கூடியதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமானவரி விகித மாற்றம் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தனிநபர் வருமானவரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

அதேபோல விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதாரவிலை எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்றெல்லாம் மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியது வழக்கம்போல வெறும் வாய் வார்த்தை ஜாலம் தானா?

கடந்த நிதி ஆண்டில் பயிர் காப்பீட்டுத் தொகை 16 ஆயிரம் கோடி அறிவித்திருந்தது. இந்த நிதியாண்டில் 15 ஆயிரத்து 500 கோடி. பயிர்காப்பீடு 500 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சியை வார்த்தையில் மட்டுமல்லாமல் செயலிலும் இந்த அரசு காட்ட வேண்டும். எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து செயல்படுத்தி உங்களுக்கெல்லாம் வழிகாட்டி உள்ளார்.

பிரதமர் தன் உரையில் அரசின் திட்டத்தினால் ஏழைகள், லட்சாதிபதி ஆக முடிகிறது என கூறியிருக்கிறார்.

பேரிடர் நெருக்கடியால் அன்றாடம் செத்துப் பிழைக்கும் ஏழை எளிய மக்கள், லட்சாதிபதி ஆகி விட்டார்கள் என பெருமிதம் கொள்ளும் இந்த அரசின் நடவடிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது?

பிரதமரின் உரையில் "தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள், எவ்வளவு முயன்றாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை யாரும் குலைக்க முடியாது" என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த அரசின் பாரபட்சத்தை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். புதிய ரயில்வே வழித்தடங்களுக்கு வடக்கு ரயில்வேக்கு 14,349 கோடி, தெற்கு ரயில்வேக்கு வெறும் 59 கோடி,

ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கக்கூடிய சட்டங்களை திட்டங்களை எல்லாம் எங்கள் மீது திணிக்கிறீர்கள். பாரபட்சமாக நிதி ஒதுக்கி விட்டு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறீர்கள். பேரிடர் நிவாரண தொகைக்காக காக்க வைக்கிறீர்கள்.

வெறும் வார்த்தைகளில் மட்டும் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டால் உங்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா? ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் அது தமிழ்நாடு.

பெரியார், அண்ணா காயிதே மில்லத், கருணாநிதி என சமூகநீதி தலைவர்களால் சமூக நல்லிணக்க தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண்.

ஒருபோதும் நீங்கள் அங்கு காலூன்ற முடியாது. உங்களுடைய அக்கறையை வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் காட்டுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்