பிகினி, ஹிஜாப், முக்காடு.. ஆடை எதுவாக இருந்தாலும் அது பெண்ணின் உரிமை: பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

பிகினி, ஹிஜாப், முக்காடு என எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதில் எதை அணிவது என்பது பெண்ணின் உரிமை என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

இதை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து 'ஜெய் பீம்'என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பிகினி, முக்காடு, ஜீன்ஸ், ஹிஜாப் என எதுவாக இருந்தாலும் அதை அணிவது பெண்களின் உரிமை. இது அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமை. ஆகையால் பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

#ladkihoonladsaktihoon என்ற ஹேஷ்டேகின் கீழ் இந்தத் தகவலை அவர் பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார டேக் லைனாக அவர் இதனைப் பயன்படுத்து வருகிறார். பெண்கள் என்றால் போராடும் சக்தி என்பதே இதன் அர்த்தம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE