ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒவைசி சென்ற காரின் டயர்கள் பஞ்சர் ஆகின.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் டோல் பிளாசா அருகே அந்தக் காரை விட்டுவிட்டு, ஒவைசி மற்றொரு காரில் டெல்லிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்துப் பேசுகிறார். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது வாகனத்தைச் சுட்டதாக கைதான இருவரும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் அவரது வீட்டிலும், அவர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE