'நான் சுரேஷ், வாவா சுரேஷ்'- சுயநினைவு திரும்பியதும் மருத்துவரின் கேள்விக்குப் பதிலளித்த பாம்பு மீட்பர்

By செய்திப்பிரிவு

கோட்டயம்: நாகப்பாம்பு தீண்டியதில் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவரும் பிரபல 'பாம்பு மீட்பர்' வாவா சுரேஷ்க்கு அளித்துவந்த வெண்டிலேட்டர் சிகிச்சை அகற்றப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை தேறிவருவதை அடுத்து தற்போது சுயமாகவே சுவாசித்து வருகிறார்.

கடந்த திங்கள்கிழமை கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல 'பாம்பு மீட்பர்' வாவா சுரேஷ் செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் ஒரு வீட்டில் நாகப்பாம்பு பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக அது கடித்தது. அதில் அவர் அங்கேயே மயக்கமான நிலைக்குச் சென்றார்.

பின்னர் கோட்டயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுயநினைவை இழந்து காணப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்துவர தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவருக்கு அளித்துவந்த வெண்டிலேட்டர் சிகிச்சை அகற்றப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்கும் அளவு உடல்நலம் தேறியுள்ளது. முன்னதாக, மயக்க நிலையில் இருந்து, 'கடவுளே' என்று கூறியபடிய கண்விழித்த அவரிடம் கோட்டயம் மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவர் ஜெயக்குமார் வாவா சுரேஷ் பேசினார்.

அவரின் பெயர் குறித்து கேள்விகேட்ட போது, 'நான் சுரேஷ், வாவா சுரேஷ்' என்று பதில் கொடுத்துள்ளார். மேலும், "இந்தப் பதில் அவரின் உயிரைக் காப்பாற்றp போராடிய மருத்துவர்களுக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும். எங்கள் கேள்விக்கு வாவா சுரேஷ் தெளிவாகப் பதில் கொடுத்திருப்பது மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதின் அறிகுறி.

நினைவாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியவும், மூளையின் செயல்பாட்டை சரிபார்க்கவும் கேள்வி கேட்கப்பட்டது. அதேநேரம், பாம்பு கடித்தது பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், மாரடைப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டன.

இன்று படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து திரவ ஆகாரம் சாப்பிட்டார்" என்று தலைமை மருத்துவர் ஜெயக்குமார் கேரள ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று முழுவதும் ஐசியூ வார்டில் வைத்து சிகிச்சை அளித்துவிட்டு, நாளை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE