ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார்; ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு: மக்களவையில் டி.ஆர்.பாலு ஆவேசம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் தொடர்கிறது. இதில் பங்கேற்ற திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திடரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியான டி.ஆர்.பாலு உரை நிகழ்த்தினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுகவின் மூத்த எம்.பியான பாலு பேசியதாவது:

எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தமிழகம் பெயர்போனது. இருப்பினும், ஒருசில பெயர்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். அரசி வீரமங்கை வேலுநாச்சியார், பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக ஐந்தாயிரம் வீரர்களுடன் போர் தொடுத்தார்.

அந்தப் போரில் வெற்றியும் பெற்றார். இவர்தான் இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி. இந்த நிகழ்ச்சி 1780இல் அதாவது, ஜான்சி ராணி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போர் நடத்தி அந்தப் போரிலே வெற்றியும் கண்டார். குடியரசு தின அணிவகுப்பில் இந்த வீரமங்கையின் திருவுருவச் சிலை வைக்கப்பட்ட ஊர்தியை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.

ஆனால், மத்திய அரசு அந்த ஊர்தியை நிராகரித்துவிட்டது. மகாகவி பாரதியாரின் கவிதைகள், சுதந்திரப் போராட்ட நாட்களில் நீரையும் தீப்பற்ற வைக்கும் ஆற்றலுடன் இருந்தது.

அவரது திருவுருவச் சிலையும் அந்த ஊர்தியிலே இடம் பெற்றிருந்தது. இதுவும் மறுக்கப்பட்டது. அதைப்போல புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே ஆங்கிலேயருக்கு எதிராக வணிகக் கப்பல்களை ஓட்டியவர்.

அவரது திருவுருவச் சிலையும் இடம்பெற்ற அந்த ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த ஒரு உறுப்பினர் வ.உ.சி. என்ன வியாபாரியா? என்று கேட்டிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டம் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்களைக் கொண்டு இந்த தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், மத்திய அரசு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இதே ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்தார். மக்கள் அந்த ஊர்தியை கண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட நாயகர்களின் வீரத்தை, தியாகத்தினைக் கண்டு உணர்ச்சியூட்டப் பெற்றனர்.

இவர்களைப்போல் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவத்தைத் தாங்கிய ஊர்தியும் சென்னை அணிவகுப்பிலே பங்கேற்றன. இதில் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமை இடம் பெற்றன.

இப்பட்டியலி, தந்தை பெரியார், காமராசர், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், கக்கன், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் உள்ளனர்.

மேலும் அதில், வீரன் அழகுமுத்துகோன், மாவீரன் பொல்லான், வீரமங்கை குயிலி, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், திருப்பூர் குமரன் உள்ளிட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த ஊர்திகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து போட்டி தேர்வுகளை தமிழில் எழுதுவது குறித்து டி.ஆர்.பாலு மேலும் பேசியதாவது:

இன்றைக்கும்கூட ஐஏஎஸ். தேர்வை மக்கள் தங்களுடைய தாய்மொழியில் எழுத முடியும். ஆனால், ஏதோ இப்போதுதான் இதனை புதிதாக செய்யப்போவதை போல் போட்டித் தேர்வுகளை தாய்மொழியில் எழுதலாம் என்று குடியரசுத் தலைவர் இந்த அவைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இது சரியல்ல. இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே செயல்பாட்டில் உள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே, தபால் துறைகள் நடத்திய போட்டித் தேர்வுகளில் என்ன நிகழ்ந்தது?

குடியரசுத் தலைவர் உரை வாயிலாக பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று சொல்ல முன்வரும் இதே அரசு அன்றைக்கு ரயில்வே மற்றும் தபால் துறைகளில் நடந்த போட்டித் தேர்வுகளில் பிராந்திய மொழியில் எழுதும் வாய்ப்பை மறுத்தது.

ஆனால், இறுதியாக திமுக, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தெரிவித்த தீவிர எதிர்ப்பின் காரணமாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் அந்த முடிவை மாற்றி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்ற முடிவை மீண்டும் அமல்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்