புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அவர் பேச்சு மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர், மத்திய வெளியுறவு அமைச்சர், ஏன்... அமெரிக்க செய்தித் தொடர்பாளர் வரை வரிந்துகட்டிக் கொண்டு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அப்படி என்னதான் பேசினார் ராகுல்? - 10 தெறிப்புகள்: * இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எதுவும் தேவைப்படாமல் நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய பணக்காரர்களுக்கென ஓர் இந்தியா உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.
* இந்தியாவில் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 46% சரிவு ஏற்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? நீங்கள் அமைப்பு சாரா தொழிலை நசுக்கிவிட்டீர்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை சிதைத்துவிட்டீர்கள். உங்கள் கவனம் எல்லாம் வெறும் 5 முதல் 10 பேர் மீதுதான்.
* நாட்டில் ஏஏ வேரியன்ட் உள்ளது. அது 'AA' (Ambani Adani variant). அதானி, அம்பானி வேரியன்ட் இந்திய பொருளாதாரம் முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. எனக்கு பெரிய தொழிற்சாலைகள் மீது எந்த வெறுப்பும் இல்லை. நீங்கள் அதன் மீது கவனம் செலுத்தங்கள். ஆனால் அவற்றால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள்தான் அடிமட்ட மக்களுக்கான வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும்.
» வாகன விதிமீறல்: தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
» பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சன்னியா? சித்துவா? - 6-ம் தேதி அறிவிக்கிறார் ராகுல் காந்தி
* மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். தமிழகத்தில் உள்ள எனது சகோதரருக்கு, மகாராஷ்டிராவில் உள்ள எனது சகோதரிக்கு இருக்கும் அதே உரிமை இருக்கிறது. உ.பி., பிஹார், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் இன்னும் பிற மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கும் சம உரிமை உள்ளது.
* இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள். கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். 1947-ல் அரசாட்சிக்கு காங்கிரஸ் முடிவு கட்டியது. ஆனால் இப்போது மீண்டும் ராஜா எழுந்துள்ளார். இந்திய அமைப்பில் இருந்து பஞ்சாபும், தமிழகமும் புறக்கணிக்கப்படுகிறது. அவர்களுக்கு குரலில்லை. பஞ்சாப் விவசாயிகளின் குரல் அந்த ராஜாவுக்குக் கேட்காது. கூட்டாட்சியின் மூலம் இந்தியாவில் ஆளாமல் குச்சியை வைத்து ஆட்சி நடத்த ஒரு ராஜா முயற்சிக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் இப்படியான குச்சி சுழற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் குச்சி மக்களால் உடைக்கப்படும் என்று அவருக்குத் தெரியவில்லை.
* மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது.
* கேரள மக்களுக்கு ஒரு கலாச்சாரம், மாண்பு, வரலாறு இருக்கிறது. ராஜஸ்தான் மக்களுக்கும் அவர்களுக்கான மாண்பும், வரலாறும் உள்ளது. இது பல மலர்களால் ஆன ஓர் அழகிய பூங்கொத்து போன்றது. நான் எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன்.
* இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம்.
* உங்களின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது. இதுதான் தேசத்திற்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். இந்திய மக்களுக்கு எதிரான குற்றம். நீங்கள் அலட்சியமாக மாயையில் இருக்காதீர்கள். எதிரிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
* எனது பாட்டியின் மீது 32 குண்டுகள் பாய்ந்தன. எனது தந்தை வெடிகுண்டு தாக்குதலில் துண்டுத் துண்டாக சிதறினார். ஆனால், இன்று உங்களின் கொள்கைகள் பாகிஸ்தானையும், சீனாவையும் ஒற்றுமையாகச் செய்துள்ளது. இது ஆபத்தானது. இது பிரச்சினையை உருவாக்கும். நாட்டுக்கு இப்போது உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்காமல் நடந்துகொள்கிறீர்கள்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும்போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 'நான் ஒரு தமிழன்' என்று பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவிவருகிறது. இதே வீடியோவில் உத்தரப் பிரதேசம் குறித்து உரையில் ஏன் பேசவில்லை என்பதுபோல் அந்த நபர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் கொடுப்பதை தவிர்த்து வேகமாக நடந்துச் சென்றுவிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கான எதிர்வினைகள்:
> "வழக்கம்போல் உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் ராகுல் ஜி. நீங்கள் உங்கள் பேச்சில் தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல்கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழகமாகத்தான் இருக்கும். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். இப்போதைக்கு விடைபெறுகிறேன் சார். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
> "மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளால் பாகிஸ்தானும், சீனாவும் நட்பாகிவிட்டதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அவருக்கு நான் வரலாறு சொல்லிக் கொடுக்கிறேன். 1963-ல், பாகிஸ்தான் சட்டவிரோதமாக சக்ஷ்கம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைத்தது. 1970-களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா காரகோரம் நெடுஞ்சாலையை அமைத்தது. 1970-ம் ஆண்டுதொட்டே இரண்டு நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகின்றன. 2013-ல், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் நடந்த காலத்தில் மத்தியில் யார் ஆட்சி நடந்தது என்று ராகுல் காந்தி எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது சீனாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக விலகியிருந்தனரா என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
> "இந்த மனிதர் என்னதான் கற்றுக் கொண்டுள்ளார். உங்களின் பேச்சில் தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள் ராகுல் ஜி. புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. புதுச்சேரியில் தமிழர்கள்தான் உள்ளனர். அப்படியென்றால் தமிழ் மக்கள் எங்களை நம்புகிறார்கள் என அர்த்தம். தயவு செய்து வளருங்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. பேசும்முன் யோசியுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் பேசும்போதும் இப்படி சறுக்குவது துரதிர்ஷ்டவசமானது" என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
> நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், "ராகுல் காந்தி குழப்பமான மனநிலையில் உள்ளார். அவர் இந்தியா ஒரு தேசமல்ல எனக் கூறுகிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லை" என்று கூறியுள்ளார்.
> "ஒரு சட்ட அமைச்சராக மட்டுமல்ல ஒரு சாதாரண குடிமகனாகவும் நான் ராகுல் காந்தி இந்திய நீதித்துறை பற்றியும், தேர்தல் ஆணையம் பற்றியும் கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவை இரண்டும் ஜனநாயகத்தின் அடிநாதம். இந்த இரு அமைப்புகளிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்" என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
> ராகுல் காந்தி தனது உரையில் சீனா, பாகிஸ்தானின் நட்பு குறித்து பேசியதற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் பதிலளித்துள்ளார். அவர் நிருபர்களிடம், "இந்த விஷயத்தை நான் பாகிஸ்தானியர்களிடமும், சீனர்களிடமும் விட்டுவிடுகிறேன். அவர்களுக்கு இடையே உள்ள உறவைப் பற்றி அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், நான் ராகுல் காந்தியின் வார்த்தைகளை ஆதரிக்க மாட்டேன். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிகவும் முக்கியமான உறவு நீடிக்கிறது. நாங்கள் எப்போதுமே 'எந்த ஒரு நாடும் அமெரிக்கா, சீனா என இரண்டில் ஒன்றின் சார்பாளராக இருக்க வேண்டும்' என்று கூறியதில்லை. அமெரிக்காவுடன் என்ன மாதிரியான உறவை வளர்ப்பது என்பதை எங்களது நட்பை விரும்பும் நாடுகளின் முடிவில் விட்டுவிடுவோம். ஆனால், எங்களுடன் உறவை வளர்க்கும் நாடுகளுக்குக் கிடைக்கும் நன்மைகளும், சலுகைகளும் மற்ற நாடுகளின் உறவைத் தேர்ந்தெடுப்போருக்கு கிடைக்காது என்பது மட்டும் உறுதி" என்று பதிலளித்துள்ளார்.
> முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், " ராகுல் காந்தி நாடாளுமன்ற உரையில் சீனா, பாகிஸ்தான் உறவு பற்றி பேசியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் உள்ளேன். சீனாவும் பாகிஸ்தானும் 1960களில் இருந்தே கூட்டாளிகளாகத்தான் இருக்கின்றனர். ராகுலின் தாத்தா காலத்திலேயே இது ஆரம்பித்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தை அவர்தான் ஐ.நா. சபை கொண்டு சென்றார் என்பதை நினைவுபடுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
> ராகுல் காந்தி பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தீர்மானம் கொண்டுவந்தார். ராகுல் காந்தி ஒரு வசனகர்த்தா, வரவேற்பரை அரசியல்வாதி என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசியல் சாசனத்தின் முன்னுரையிலேயே இந்தியா ஒரு தேசம் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் ராகுல் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் என்று கூறினார்.
நாடாளுமன்ற கவன ஈர்ப்புகளும் ராகுலும்!
நாடாளுமன்றத்தில் ராகுல் தனது பேச்சுக்களாலும் செயல்களாலும் கவனம் பெறுவது இது முதன்முறை அல்ல. நாடாளுமன்றத்தில் தூக்கக் கலக்கத்தில் வீடியோவில் சிக்கியது, அமேதியில் கலாவதி என்ற இளம்பெண் வீட்டில் உணவருந்தியது குறித்து சுவாரஸ்யமற்ற பேச்சுக்களைப் பேசியது என்றும் ராகுல் கவனிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார். தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி, நேராக நடந்து சென்று மோடியைக் கட்டி அணைத்தார். ராகுல் காந்தி வேகமாக பிரதமரை நோக்கி வருவதைப் பார்த்து ஒரு வினாடி அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
ஆனால் ராகுல் பிரதமரைக் கட்டிப்பிக்க, அவரே ராகுல் காந்தியுடன் கைகுலுக்கினார். அதன் பின்னர் அவர் இருக்கையில் அமர்ந்து கண்ணடித்த காட்சி அப்போது வெளியான ’ஒரு அதார் லவ்’ படத்தின் பாடல் காட்சியுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் குவிந்தன.
இருந்தாலும் நேற்றைய பேச்சு மிகப் பெரிய வீச்சை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago