கோட்டயம்: நாகப்பாம்பு தீண்டியதில் அவசர சிகிச்சையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் உடல்நலம் தேறிவருகிறார். அபாயக் கட்டத்தை தாண்டியுள்ள அவரின் உடல்நலம், மற்றவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் அளவுக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 'பாம்பு பிடி மன்னன்' வாவா சுரேஷ். இதுவரை 50,000-க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள இவர், ராஜ நாகங்களை பிடிப்பதில் வல்லவர். செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் நேற்று ஒரு வீட்டில் நாகப்பாம்பு புகுந்ததாக வாவா சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்பை லாவகமாக பிடித்த அவர் அதனை சாக்குப் பைக்குள் நுழைக்க முயன்றார். ஆனால், அப்போது விநாடியில் பாம்பு கைப்பிடியிலிருந்து நழுவ, அது சுரேஷின் வலது தொடையில் கடித்தது. சில மணிநேரங்களில் அங்கேயே மயக்கமான நிலைக்குச் சென்றவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த வாவா சுரேஷ் உடல்நலம் இப்போது தேறியுள்ளது. சுயநினைவுக்கு திரும்பியுள்ள அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் அதிகரித்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவருக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல், மக்களவை எம்.பி. சசிதரூர் வாவா சுரேஷ் மீண்டு வரவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் அழைத்தாலும் பாம்புகளைப் பிடிக்கும் வாவா சுரேஷ்க்கு பாம்பு கடித்துவிட்டது என தெரிந்ததும் பலரும் அவர் குணமடைய பிரார்த்திப்பதாக குரல் எழுந்த நிலையில், ஒரு கலகக் குரலும் கவனிக்க வைத்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலரான பிரியங்கா கடாம் என்பவர்தான் சில விஷயங்களை இதுதொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார். அதில், "வாவா சுரேஷுக்கு நேர்ந்த ஆபத்தை பெரும்பாலானோர் அறிந்துள்ளார்கள். அவர்களுக்கு இங்கே சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவர் தனது மனைவியை விஷப் பாம்பை பயன்படுத்தி கொலைசெய்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, கேரள வனத்துறை, பாம்பு மீட்பு மற்றும் இடமாற்ற நெறிமுறையை வழங்கியது மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள அனைத்து பாம்பு மீட்பவர்களையும் வனத்துறையில் பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது. அந்த வழிமுறையின்படி, எழுத்து மற்றும் நடைமுறை பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பாம்புகளைக் கையாள அல்லது மீட்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாவா சுரேஷ் வனத்துறையில் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர் அங்கீகரிக்கப்பட்ட பாம்பு மீட்பர் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், விதிகளை மீறி, நாகப்பாம்பை பிடித்துள்ளார். நேற்று நாகப்பாம்பை கையாளும் விதத்திலும் வாவா சுரேஷ் அலட்சியமாக இருந்த விதம், அந்த வீடியோவிலேயே காண முடிகிறது. வாவா சுரேஷ் வனத்துறையின் ஆலோசனையை மீறி நடந்துகொண்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு நபரின் தவறான செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை விடுத்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அவருக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடுகிறார். மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இன்னொரு எம்.பி கூறுகிறார்.
இவரைப் போன்று அரசியல் தொடர்புகளுடன் வனவிலங்குகளை தவறாகக் கையாளுவது குறித்து ஒருபோதும் கேள்வி கேட்கப்படுவதில்லை. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இளம் குழந்தைகளை தவறான செயலை செய்ய தூண்டுவதற்கும் அவர்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கும் இதுபோன்ற நபர்களின் செயல்கள் முற்படுகிறது. அப்படி செய்யும்போது சிலர் இறந்துவிடும் சம்பவம் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
வாவா சுரேஷை விஷப் பாம்பு தீண்டுவது இது முதன்முறையல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டு விரியன் வகை பாம்பு ஒன்று தீண்டியதால் பல நாட்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். வாவா சுரேஷுக்கு பாம்புப் பண்ணையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், அதைத் துறந்த அவர், பாம்புகளைப் பிடித்து அவற்றை வனப் பகுதியில் விடுவிக்கும் பணியில் மன நிம்மதி இருப்பதாகக் கூறி, அரசு வேலையை உதறினார். ஒரு பேட்டியில் அவர், நான் பாம்பு பிடிக்கவில்லை என்றால் உயிரோடு இல்லை என்று அர்த்தம் எனக் கூறியிருப்பார். பலமுறை வனத்துறைக்கே உதவியிருக்கும் வாவா சுரேஷ், வனத்துறையின் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுகிறார் என்ற தகவல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago