காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உள்ளிட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் நைரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உள்ளூர் கமாண்டராக செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி ஜாகித் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், உள்ளூர்வாசிகளான வாஹித் ரஷீத், இனாயதுல்லா மிர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி கபீல் ஆகியோர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் ஜாகித் வானி மீது பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் உள்ளன. பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளது. ஜாகித் வானி மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி கபீல் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த வெற்றி என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார். ஜாகித் வானி கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மற்ற தீவிரவாதிகள் சிதறுவார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதேபோல, பட்காம் மாவட்டம் சரார்-இ-ஷெரீப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்துஏ.கே.56 ரக துப்பாக்கியும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. இறந்த தீவிரவாதியை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஜனவரி மாதம் மட்டும் இதுவரை 11 என்கவுன்டர்களில் 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 21 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE