விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது: மத்திய அரசுக்கு ராகேஷ் டிகைத் கண்டனம்

புதுடெல்லி: விவசாயிகளுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் வரை டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு செய்ததையடுத்து போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ராகேஷ் டிகைத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கடந்த டிசம்பர் 9-ம் தேதி மத்திய அரசு கடிதத்தை எங்களிடம் அளித்தது. ஆனால் உறுதி அளித்தது போல் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

இதற்காக மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஜனவரி 31-ம் தேதியை (இன்று) துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடிக்கவுள்ளனர். நாடு முழுவதும் இந்தத் தினத்தை விவசாயிகள் கடைப்பிடித்து மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE