உண்மை இருக்கும் இடத்தில் மகாத்மா காந்தி வாழ்கிறார்: காங். மூத்த தலைவர் ராகுல் பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘மகாத்மா காந்தி தற்போதுஇல்லை என்று இந்துத்துவா வாதிகள் நினைக்கின்றனர். ஆனால், உண்மை எங்கிருக்கிறதோ, அங்கு காந்தி வாழ்கிறார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லி ராஜ் காட் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில், ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘மகாத்மா காந்தியை ஒரு இந்துத்துவாவாதி சுட்டுக் கொன்றார். தற்போது அவர் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், உண்மை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் காந்தி வாழ்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘மகாத்மா காந்தி நினைவு தினத்தில் அவருக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரிக்கிறோம். இந்த நாட்டுக்காக துணிச்சலுக்காகப் போராடி தங்கள் இன்னுயிரை நீத்த வீரமிக்க ஆண்கள், பெண்களுக்கு இந்த நேரத்தில் தலைவணங்குகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE