பழகுனர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை: ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில்வே நிறுவனங்களில் பழகுனர்களுக்கு, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்,மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், பயிற்சி முடித்த நபர்களுக்கு 2004 முதல் 1-ம் மட்ட பணிகளில் உதவியாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

பணி தேவையைக் கருத்தில் கொண்டு இவர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். தற்காலிக ரயில்வே பணியாளர்களான இவர்களுக்கு சில பயன்கள் அளிக்கப்படுகின்றன. முறையான நடைமுறை விதிகளைக் கடைப்பிடிக்காமல் இவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படமாட்டார்கள்.

இந்திய ரயில்வேயில் வெளிப்படையான, நியாயமான மாற்றங்களை செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, 2017 முதல் 1-ம் மட்ட பணியிடங்களில், கணினி அடிப்படையிலான, தேசிய அளவிலான பொதுத்தேர்வு மூலம் அனைத்து பணி நியமனங்களும் நடைபெறுகிறது.

ரயில்வே நிறுவனங்களில் பழகுனர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்,மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE