புதுடெல்லி: தூய்மை இயக்கத்தை என்றுமே மறவாதீர்கள், ஒருமுறையே பயன்படுத்தும் நெகிழிக்கு எதிரான இயக்கத்தை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டியது அவசியம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், தற்சார்பு பாரதம் என்ற மந்திரம் ஆகியவை நமது கடமைகள் இதன் மூலம் தேசம், வளர்ச்சியின் புதிய சிகரங்களை முத்தமிடும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி மூலம் உரையாற்றினார். இது 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலின் மேலும் ஒரு பகுதி வாயிலாக நாம் ஒன்றிணைகிறோம். இது 2022ஆம் ஆண்டின் முதலாம் மனதின் குரல். நாடு-நாட்டுமக்கள் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான கருத்தூக்கங்கள்-சமூக அளவிலான முயல்வுகள் நிறைந்திருக்கும் விஷயங்களை இன்று நாம் மீண்டும் முன்னெடுத்துச் செல்வோம். இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தல்களை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம். தில்லியின் ராஜ்பத்தில் தைரியம் மற்றும் திறமைகளைப் பார்த்தோம், இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் நிரம்பச் செய்தன.
» ‘‘முக்கிய சாதனை’’- 75% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்
ஒரு மாற்றத்தையும் நீங்கள் கவனித்திருக்கலாம் - குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளன்று தொடங்கி, ஜனவரி மாதம் 30ஆம் தேதி, அதாவது காந்தியடிகள் காலமான தினம் வரை நடக்கும். இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டிருக்கிறது. இது தேசமெங்கிலும் மிகப் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது மக்கள் ஆனந்தப்பட்டார்கள், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாது.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் ராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.
நண்பர்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையே தேசத்தில் பல மகத்துவமான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஒன்று, பிரதமர் சிறுவர்களுக்கான தேசிய விருது. மிகச் சிறிய வயதிலேயே சாகசமும், உத்வேகமும் நிறைந்த செயல்களைப் புரிந்த சிறுவர்களுக்கு வழங்கப்படுவது இது. நமது இல்லங்களில் நாம் இந்தச் சிறுவர்கள் பற்றிக் கண்டிப்பாகக் கூற வேண்டும்.
இதனால் நமது குழந்தைகளுக்கும் உத்வேகம் பிறக்கும், அவர்கள் மனங்களிலும் தேசத்திற்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்ற உற்சாகம் ஊற்றெடுக்கும். தேசத்தில் இப்பொழுது பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பத்ம விருதுகளைப் பெற்றவர்களில் பலரைப் பற்றி வெகு சிலரே அறிவார்கள். இவர்கள் நமது நாட்டின் பாடப் பெறாத நாயகர்கள், இவர்கள் எளிய சூழ்நிலைகளில் அசாதாரணமான செயல்களைப் புரிந்தவர்கள். எடுத்துக்காட்டாக, உத்தராக்கண்டின் பஸந்தி தேவி அவர்கள் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
பசந்தி தேவி தனது வாழ்க்கை முழுவதையும் போராட்டங்களுக்கு இடையே வாழ்ந்திருக்கிறார். சிறிய வயதிலேயே இவருடைய கணவர் காலமானதால், இவர் ஒரு ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். இங்கே வசிக்கும் போதே, இவர் நதியைக் காப்பாற்றப் போராடினார், சுற்றுச் சூழலின் பொருட்டு அசாதாரணமான பங்களிப்பை அளித்தார். இவர் பெண்களின் அதிகாரப் பங்களிப்பிற்காகக் கணிசமான பணியாற்றியிருக்கிறார். இதைப் போலவே மணிப்பூரைச் சேர்ந்த 77 வயதான லோரேம்பம் பீனோ தேவி அவர்களும் பல தசாப்தங்களாக மணிப்பூரின் லிபா துணிக் கலையைப் பாதுகாத்து வருகிறார். இவருக்கும் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறது.
பைகா பழங்குடியினரின் நடனக்கலைக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு, மத்திய பிரதேசத்தின் அர்ஜுன் சிங்க்கு பத்ம விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பத்ம விருது பெறுபவர்களில் ஒருவர், அமாயி மஹாலிங்கா நாயக். இவர் ஒரு விவசாயி, கர்நாடகத்தில் வசிப்பவர். சிலர் இவரை சுரங்க மனிதன் என்றும் அழைக்கிறார்கள். தனது வயல்களில் இவர் செய்திருக்கும் புதுமையைப் பார்ப்பவர் அனைவரும் திகைத்துப் போகிறார்கள். இவருடைய முயற்சிகள் காரணமாக மிகப்பெரிய ஆதாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இவரைப் போன்ற பல புகழப்பெறாத நாயகர்கள், தேசத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பிற்காக கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், இவர்ளைப் பற்றித் தெரிந்து கொள்ள கண்டிப்பாக முயலுங்கள். இவர்களால் நமது வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் நண்பர்களான நீங்கள் அனைவரும் ஏகப்பட்ட கடிதங்கள், செய்திகளை, ஆலோசனைகளை அனுப்பி வைக்கிறீர்கள். இந்த வரிசையில் சில விஷயங்களை என்னால் மறக்க முடியாது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய மனதின் குரலை தபால் அட்டை வாயிலாக எழுதி அனுப்பி இருக்கிறார்கள். இந்த ஒரு கோடி தபால் அட்டைகள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருக்கின்றன, அயல்நாடுகளிலிருந்தும் வந்திருக்கின்றன.
நேரம் ஒதுக்கி, இவற்றில் சில தபால் அட்டைகளை நான் படிக்க முயன்றேன். நமது தேசத்தின் புதிய தலைமுறையினருடைய எண்ணப்பாடும், சிந்தனையும் எத்தனை பரந்திருக்கிறது, விசாலமானதாக இருக்கிறது என்பதை இந்தத் தபால் அட்டைகள் எனக்கு உணர்த்தின. இவற்றில் சில தபால் அட்டைகளின் உள்ளடக்கத்தை நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அசாமின் கௌஹாடீயிலிருந்து ரித்திமா ஸ்வர்கியாரி எழுதிய தபால் அட்டை இது. ரித்திமா 7ஆம் வகுப்பில் படிக்கிறார், சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டில் பாரதம் உலகிலேயே மிகவும் தூய்மையான நாடாக, தீவிரவாதம் முழுமையாகக் களையப்பட்ட நாடாக, 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற நாடுகளில் ஒன்றாக, விபத்துக்களே இல்லாத நாடாக, நீடித்த உத்திகளால் உணவுப் பாதுகாப்புத் திறனுடைய நாடாக இருக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தியிருக்கிறார். ரித்திமா, நமது பெண்கள் காணும் கனவு எப்போதுமே நிறைவடையும். அனைவரின் முயற்சிகளும் ஒன்றிணையும் போது, இளம் தலைமுறையினரான நீங்கள் இலக்கு வைத்துச் செயல்படும் போது, நீங்கள் எப்படிப்பட்ட பாரதத்தைக் காண விரும்புகிறீர்களோ, அப்படிக் கண்டிப்பாக ஆகும்.
ஒரு தபால் அட்டை, உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நவ்யா வர்மாவிடமிருந்து வந்திருக்கிறது. 2047ஆம் ஆண்டு பாரதத்தில் அனைவருக்கும் கௌரவம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும், அங்கே விவசாயிகள் தன்னிறைவு பெற்றவர்களாக, ஊழல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று தனது கனவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நவ்யா, தேசத்தின் பொருட்டு நீங்கள் கண்டிருக்கும் கனவு பாராட்டப்படக்கூடியது. இந்தத் திசையை நோக்கி தேசம் விரைவாக முன்னேறியும் வருகிறது. நீங்கள் ஊழலற்ற பாரதம் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். ஊழல் என்ற கரையான் தேசத்தை அரித்து விடுகிறது.
இதிலிருந்து விடுதலை அடைய 2047 வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? இந்தப் பணியை நாட்டுமக்களான நாம், இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும், விரைவாகச் செய்ய வேண்டும், இதற்கு மிகவும் அவசியம், நாமனைவரும் அவரவர் கடமைகளுக்கு முதன்மை அளிப்பது தான். எங்கே கடமையுணர்வு இருக்கிறதோ, கடமையே தலையாயது என்ற உணர்வு இருக்கிறதோ, அங்கே ஊழலின் சாயல் கூட படியாது.
நண்பர்களே, மேலும் ஒரு தபால் அட்டை என் முன்னே இருக்கிறது, சென்னையைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் எழுதியிருப்பது. 2047ஆம் ஆண்டில் பாரதம் பாதுகாப்புத் துறையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருப்பதைத் தான் கனவு காண்பதாக இப்ராஹிம் எழுதியிருக்கிறார். நிலவில் பாரதம் தனது ஆய்வு தளம் அமைக்க வேண்டும், செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்தும் பணி தொடங்க வேண்டும், கூடவே, பூமி சூழல் மாசிலிருந்து விடுபட, பாரதம் பெரிய அளவிலான பங்களிப்பை அளிப்பதைக் காண்பதே தனது கனவு என்றும் கூறியிருக்கிறார். இப்ராஹிம், எந்த தேசத்திடம் உங்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கின்றார்களோ, அந்த தேசத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது.
நண்பர்களே, என் முன்பாக மேலும் ஒரு கடிதம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ராய்சேனில் சரஸ்வதி வித்யா மந்திரில் பத்தாம் வகுப்பு படிக்கும் பாவ்னா இதை எழுதியிருக்கிறார். பாவ்னா, நீங்கள் தபால் அட்டையை மூவண்ணத்தால் அலங்கரித்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை நான் முதற்கண் கூறி விடுகிறேன். பாவ்னா புரட்சியாளர் ஷிரிஷ் குமாரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
நண்பர்களே, கோவாவிலிருந்து லாரென்ஷியோ பரேராவிடமிருந்து ஒரு தபால் அட்டை கிடைத்திருக்கிறது. இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர். இவருடைய கடிதத்தின் விஷயமும் சுதந்திரத்தின் பாடப்பெறாத நாயகர்கள். ”பீகாஜி காமா பாரதநாட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, மிகத் துணிவு வாய்ந்த பெண்களில் ஒருவர். பெண்களுக்கு அதிகாரப் பங்களிப்பை உடைமையாக்க, இவர் நாட்டிலும், அயல்நாடுகளிலும் பெரிய இயக்கத்தை நடத்தினார்,
பல கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். சுதந்திரப் போராட்டக் களத்தில் பீகாஜி காமா அவர்கள் மிகத் துணிச்சல் மிக்க பெண்களில் ஒருவர் என்பதில் எந்த ஐயமுமில்லை. 1907ஆம் ஆண்டிலேயே இவர் ஜெர்மனியில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார். இந்த மூவண்ணக் கொடியை வடிவமைப்பதில் இவருக்குத் துணையாக இருந்தவர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா 1930ஆம் ஆண்டு ஜெனீவாவில் காலமானார்.
பாரதநாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவருடைய அஸ்தி பாரதம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இவருக்கு இருந்த கடைசி ஆசையாக இருந்தது. அவருடைய விருப்பத்திற்கிணங்க, 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த நாளே அவருடைய அஸ்தி பாரதத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இது நடைபெறவில்லை.
இந்தப் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு வேளை இறைவனுடைய சித்தமாக இருக்கலாம். நான் குஜராத்தின் முதல்வராக இருந்த வேளையில், 2003ஆம் ஆண்டு அவருடைய அஸ்தி பாரதம் கொண்டு வரப்பட்டது. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்களின் நினைவாக அவர் பிறந்த இடத்தில், கட்சின் மாண்டவியில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது.
நண்பர்களே, பாரதத்தின் அமிர்த மஹோத்சவத்தின் உற்சாகம் நம் நாட்டோடு மட்டும் நின்று விடவில்லை. பாரதத்தின் நட்பு நாடான க்ரோயேஷியாவிலிருந்தும் 75 தபால் அட்டைகள் கிடைத்திருக்கின்றன. க்ரோயேஷியாவின் ஜாக்ரேபில் School of Applied Arts and Designஐச் சேர்ந்த மாணவர்கள் 75 தபால் அட்டைகளை பாரதநாட்டு மக்களுக்காக அனுப்பி இருக்கிறார்கள், அமிர்த மஹோத்சவக் கொண்டாட்டங்களுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து நாட்டுமக்கள் தரப்பிலிருந்து க்ரோயேஷியா மற்றும் அங்கே இருப்போருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, பாரதம் கல்வி மற்றும் ஞானத்தின் தவபூமியாக இருந்து வந்திருக்கிறது. நாம் கல்வியை வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை; மாறாக இதை ஒரு முழுமையான அனுபவமாகவே பார்த்திருக்கிறோம். நமது தேசத்தின் மிகப்பெரிய ஆளுமைகளுக்கும் கல்வியோடு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. பண்டித மதன் மோஹன் மாளவியா அவர்களும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார் என்றால், அண்ணல் காந்தியடிகளும் குஜராத் வித்யாபீடத்தை அமைத்து முக்கிய பங்காற்றினார்.
குஜராத்தின் ஆணந்தில் ஒரு மிக ரம்மியமான இடம் உண்டு, வல்லப் வித்யாநகர். சர்தார் படேல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருடைய இரண்டு நண்பர்களான பாய் காகாவும் பீகா பாயியும், அங்கிருக்கும் இளைஞர்களுக்கான ஒரு மையத்தை அமைத்தார்கள். இதைப் போலவே மேற்கு வங்கத்தில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்களும் சாந்திநிகேகதனை நிறுவினார். மஹாராஜா கெய்க்வாடும் கல்வியின் பலமான புரவலர்களில் ஒருவராக இருந்தார். இவர் பல கல்வி நிறுவனங்களை நிறுவியதோடு, டாக்டர் அம்பேட்கர், ஸ்ரீ அரவிந்தர் உட்பட பல ஆளுமைகளுக்கு உயர்கல்வி படிக்கவும் உத்வேகம் அளித்தார். இப்படிப்பட்ட மிகவுயரிய ஆளுமைகளின் பட்டியலில் ஒரு பெயர் மஹேந்திர பிரதாப் சிங் அவர்களுடையதும்.
ராஜா மஹேந்திர பிரதாப் சிங் ஒரு தொழில்நுட்பப் பள்ளியை அமைக்கும் பொருட்டு, தனது வீட்டையே இதற்கென அளித்தார். அலீகட் மற்றும் மதுராவில் கல்வி நிலையங்களை அமைக்க, நிறைய பொருளாதார உதவிகளைப் புரிந்தார். அவரது பெயரால் அலீகடில் ஒரு பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் பெரும்பேறு சில காலம் முன்பாக எனக்குக் கிடைத்தது. கல்வி என்ற விளக்கை, மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் உயிர்ப்புடைய உணர்வு பாரதத்தில் இன்றும் துடிப்போடு இருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உணர்வின் மிக அழகான விஷயம் என்ன தெரியுமா? கல்வி பற்றிய இந்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மால் காண முடிவது தான் அது.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் அவர்களின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. தாயம்மாள் அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்றுத் தனது வாழ்க்கையை நடத்தி வந்தது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும், தாயம்மாள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எந்த முயல்வையும் விட்டு வைக்கவில்லை.
இவருடைய பிள்ளைகள் சின்னவீரன்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தார்கள். இந்த நிலையில், பள்ளியில் காப்பாளர்களோடு நடந்த ஒரு கூட்டத்தில், வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாளும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அனைத்தையும் கேட்டார். இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்த போது, அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைப்பட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.
எந்தத் தாயம்மாள் இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தாரோ, தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை பள்ளிக்குக் கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படிச் செய்ய மிகப்பெரிய மனது வேண்டும், சேவையுணர்வு வேண்டும். இப்போது பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிகிறறது ஆனால், பள்ளியின் கட்டமைப்பு மேம்பட்டால், இங்கே உயர்நிலைக்கல்வி வரை படிக்க முடியும் என்று தாயம்மாள் கூறினார்.
நமது தேசத்தின் கல்வி தொடர்பாக இருக்கும் இந்த உணர்வு பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஐ.ஐ.டி. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரின் இதே மாதிரியான ஒரு கொடை பற்றி எனக்குத் தெரிய வந்தது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜய் சௌத்ரி , IIT BHU FOUNDATIONக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 7 1/2 கோடி ரூபாயை கொடையாக அளித்திருக்கிறார்.
நண்பர்களே, நமது தேசத்தின் பல்வேறு துறைகளோடு இணைந்தவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்து, சமூகத்தின்பால் தங்களுடைய பொறுப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதே போன்றதொரு முயல்வை உயர்கல்வித் துறையில், குறிப்பாக நமது பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற முயற்சிகளுக்குக் குறைவேதும் இல்லை. இதைப் போன்ற முயற்சிகளை மேலும் அதிகரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில், தேசத்தில் வித்யாஞ்சலி இயக்கமும் தொடங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள், CSR, கார்ப்பரேட் நிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு வாயிலாக நாடெங்கிலும் உள்ள பள்ளிகளின் தரத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சமூக அளவிலான பங்களிப்பு மற்றும் தங்களுடையது என்ற உணர்வை முன்னெடுத்து வருகிறது வித்யாஞ்சலி.
தங்களுடைய பள்ளி-கல்லூரிகளோடு தொடர்ந்து இணைந்திருப்பது, தங்களுடைய சக்திக்கேற்ப ஏதாவது பங்களிப்பை அளிப்பது போன்ற விஷயங்கள் அளிக்கும் மன நிறைவும், ஆனந்தமும் சொற்களில் வடிக்க முடியாதவை.
எனதருமை நாட்டுமக்களே, இயற்கை மீதான நேசம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலும் கருணை இவை தாம் நமது கலாச்சாரம், இதுவே நமது இயல்பான சுபாவமும் கூட. நமது இந்தப் பண்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டை, மத்திய பிரதேசத்தின் Pench புலிகள் சரணாலயத்தின் ஒரு பெண்புலியின் இறுதி யாத்திரையின் போது காண முடிந்தது. இந்தப் பெண்புலியை, காலர் உடைய பெண்புலி என்றே மக்கள் அழைப்பது வழக்கம். வனத்துறை, இதற்கு T-15 என்று பெயரிட்டிருந்தது. இந்தப் பெண்புலியின் இறப்பு மக்கள் மனதில் எந்த அளவுக்கு சோகத்தை ஏற்படுத்தி விட்டது என்றால், ஏதோ தங்களுடைய நெருக்கமானதொரு உறவினர் இறந்து போனதாகவே உணர்ந்தார்கள்.
இதற்கு ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு, முழு மரியாதையோடும், நேசத்தோடும் விடை கொடுத்து அனுப்பினார்கள். இது தொடர்பான படங்களை நீங்கள் சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருக்கலாம். உலகம் முழுவதிலும் இயற்கையின் மீதும், உயிரினங்களின் மீதும் பாரத நாட்டு மக்களான நம்மனைவரின் உள்ளங்களிலும் எத்தனை பாசம் இருக்கிறது என்பது பாராட்டப்பட்டது. காலர் உடைய பெண்புலி தனது ஆயுட்காலத்தில் 29 குட்டிகளைப் போட்டு, 25 குட்டிகளை வளர்த்துப் பெரிதாக்கியது. நாம் T-15டைய இந்த வாழ்க்கையையும் கொண்டாடினோம், அதே போல அது இந்த உலகை விட்டுப் பிரிந்த போது, அதற்கு உணர்வுப்பூர்வமாக விடைகொடுத்தும் அனுப்பினோம். இது தான் பாரத நாட்டவரின் அழகு. நாம் அனைத்து உயிரினத்தோடும் பாச உறவை ஏற்படுத்திக் கொள்வோம். இதே போன்றதொரு காட்சியை குடியரசுத் திருநாள் அணிவகுப்பின் போதும் காண முடிந்தது. இந்த அணிவகுப்பின் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்களின் சார்ஜர் குதிரையான விராட், தனது கடைசி அணிவகுப்பில் பங்கெடுத்தது.
குதிரையான விராட், 2003ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தது, அனைத்துக் குடியரசு தினங்களிலும் கமாண்டண்ட் சார்ஜர் என்ற முறையில் தலைமை தாங்கியது. அயல்நாட்டு குடியரசுத் தலைவர் யாருக்காவது குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும் போது, அப்போதெல்லாம் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வந்தது. இந்த ஆண்டு, இராணுவ தினத்தன்று குதிரையான விராட்டிற்கு இராணுவத் தளபதி வாயிலாக COAS பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. விராட்டுடைய விசாலமான சேவைகளைப் பார்க்கும் போது, அதன் பணி ஓய்விற்குப் பிறகு மிக விமரிசையாக இது விடை கொடுத்து அனுப்பப்பட்டது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, ஒருமித்த மனத்தோடு முயற்சி மேற்கொள்ளப்படும் போது, நேரிய நோக்கத்தோடு செயல் புரியப்படும் போது, இவற்றுக்குப் பலன்களும் கிடைக்கின்றன. இதற்கான ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு, ஆசாமில் நடந்திருக்கிறது. அஸாம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, அதன் தேயிலைத் தோட்டங்கள், ஏகப்பட்ட தேசிய சரணாலயங்கள் எல்லாம் மனதில் வந்து போகும். கூடவே, ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகத்துடைய படமும் மனதில் பளிச்சிடும். இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் என்றென்றைக்கும் அசாமின் கலாச்சாரத்தின் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொருவரின் காதினையும் வருடிச் செல்லும் பாரத் ரத்ன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவரான பூபேன் ஹஸாரிகா அவர்களின் பாடல் ஒன்று...
நண்பர்களே, இந்தப் பாடலின் பொருள் மிகவும் உசிதமானது. காசிரங்காவின் பசுமை கொஞ்சும் சூழலில், யானையும், புலியும் வசிப்பதை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை உலகம் காண்கிறது, பறவைகளின் மதுரமான கீச்சொலியைக் கேட்கிறது. அசாமின் உலகப்புகழ்மிக்க ஹத்கர்கா அதாவது கைத்தறி மூலம் நெய்யப்பட்ட மூங்கா மற்றும் ஏரி ஆடைகளிலும் கூட, ஒற்றைக் கொம்பு உருவம் காணப்படுகிறது. அசாமின் கலாச்சாரத்தில் எந்த காண்டாமிருகத்திற்கு இத்தனை மகிமை இருக்கிறதோ, இதுவும் கூட சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2013இலே 37, 2014இலே 32 காண்டாமிருகங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடினார்கள்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள கடந்த ஏழு ஆண்டுகளில், அசாம் அரசு சிறப்பான முயற்சிகள் மூலம், வேட்டையாடுதலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கத்தை முடுக்கி விட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உலக காண்டாமிருக நாளன்று, வேட்டைக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2400க்கும் அதிகமான கொம்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. இது வேட்டைக்காரர்களுக்கு விடப்பட்ட கடுமையான செய்தி. இவை போன்ற முயல்வுகளின் பயனாக, அசாமில் காண்டாமிருகங்களின் வேட்டை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2013இலே 37 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டிலே இரண்டும், 2021ஆம் ஆண்டிலே ஒரு காண்டாமிருகம் மட்டுமே கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதில், அசாம் மக்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் மற்றும் ஆன்மீக சக்தி, எப்போதும் உலகெங்கிலும் உள்ள மக்களைத் தன்பால் ஈர்த்து வந்திருக்கிறது. பாரதநாட்டுக் கலாச்சாரம், அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர், மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது என்று நான் சொன்னால், இது உங்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இல்லாமல் போகலாம். ஆனால் பாரத கலாச்சாரம் லத்தீன் அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் கூட பெரிய ஈர்ப்பாக இருக்கிறது என்று சொன்னால் இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
மெக்சிகோவில் காதிக்கு ஊக்கமளிக்கும் விஷயமாகட்டும், பிரேசில் நாட்டில் பாரதநாட்டுப் பாரம்பரியங்களைப் பிரபலமாக்க மேற்கொள்ளப்படும் முயல்வுகளாகட்டும், இவை பற்றி எல்லாம் மனதின் குரலில் நாம் ஏற்கெனவே விவாதம் செய்திருக்கிறோம். அர்ஜெண்டினா நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் பாரதநாட்டுக் கலாச்சாரம் பற்றி நான் கூற இருக்கிறேன். அர்ஜெண்டினாவில் நமது கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் விரும்பப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், அர்ஜெண்டினாவிற்கு நான் பயணம் மேற்கொண்ட போது, yoga for peace என்ற ஒரு யோகக்கலை நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன். அர்ஜெண்டினாவில் இருக்கும் ஒரு அமைப்பின் பெயர் ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷன். அர்ஜெண்டினாவில் ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷன் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா?
இந்த ஃபவுண்டேஷன், அர்ஜெண்டினாவில் பாரத நாட்டு வேதப் பாரம்பரியங்களைப் பரப்புவதிலே ஈடுபட்டிருக்கிறது. பேராசிரியர் ஏடா ஏல்ப்ரெக்ட் என்ற ஒரு அம்மையாரால் 40 ஆண்டுகள் முன்பாக இது நிறுவப்பட்டது. அவருக்கு 18 வயது ஆன பொழுது, அவர் முதன்முறையாக பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் சக்தியை அறிந்து கொண்டார். பாரதத்தில் இவர் கணிசமான காலம் தங்கியிருந்தார். பகவத் கீதை மற்றும் உபநிஷதங்கள் பற்றி நுண்மான் புலமை பெற்றார். இன்று ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷனில் 40000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள், அர்ஜெண்டினாவிலும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதற்கு சுமார் 30 கிளைகள் இருக்கின்றன. ஹஸ்தினாபுர் ஃபவுண்டேஷன், ஸ்பானிஷ் மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட வைதிக மற்றும் தத்துவ நூல்களை வெளியிடவும் செய்திருக்கிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக இதன் ஆசிரமம் அமைந்திருக்கிறது. ஆசிரமத்தில் 12 கோயில்கள் நிறுவப்பட்டு, இவற்றிலே தெய்வத் திருவுருவங்கள் இருக்கின்றன. இவையனைத்தின் மையத்தில் இருக்கும் ஒரு கோயில், அத்வைதவழி தியானத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் எல்லாம், நமது கலாச்சாரம், நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே விலைமதிப்பில்லாத மரபுச் சொத்து என்பதைப் பறைசாற்றுகிறது. உலக மக்கள் அனைவரும் இதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், புரிந்து கொள்ள விழைகிறார்கள், வாழ ஆசைப்படுகிறார்கள். நாமும் முழுப் பொறுப்புணர்வோடு, நமது பாரம்பரியச் சொத்தை, நமது வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொள்வதோடு, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே, குறிப்பாக நமது இளைய நண்பர்களிடத்திலே ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன். யோசித்துப் பாருங்கள், உங்களால் ஒரே முறையில் எத்தனை தண்டால்களை எடுக்க முடியும். நான் ஒரு விஷயத்தை உங்களிடம் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். மணிப்பூரில் 24 வயதான இளைஞரான தௌனாஓஜம் நிரஞ்ஜாய் சிங், ஒரு நிமிடத்தில் 109 தண்டால்களுக்கான சாதனையைப் படைத்திருக்கிறார். நிரஞ்ஜாய் சிங்கிற்கு இந்தச் சாதனையைத் தகர்ப்பது என்பது புதியது அல்ல; இதற்கு முன்பாகக் கூட, இவர் ஒரு நிமிடத்தில் ஒரே கையால், மணிக்கட்டை ஊன்றிச் செய்யும் தண்டால்களுக்கான சாதனையை படைத்திருந்தார். நிரஞ்ஜாய் சிங் அளிக்கும் உத்வேகத்தால் நீங்களும் உங்களுடைய உடலுறுதியை உங்கள் வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொள்வீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, இன்று உங்களோடு லடாக் பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதைத் தெரிந்து கொண்டு உங்களுக்குப் பெருமிதம் ஏற்படும். லடாக்கில் விரைவிலேயே ஒரு அற்புதமான திறந்தவெளி செயற்கைத் தடகளமும், செயற்கைப் புல்தரைதள கால்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த அரங்கம் 10,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலே உருவாக்கப்பட்டு வருகிறது, விரைவிலேயே இது நிறைவடையும். லடாக்கின் மிகப்பெரிய முதல் திறந்தவெளி அரங்கமான இதிலே 30,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர முடியும்.
லடாக்கின் இந்த நவீனமான கால்பந்தாட்ட அரங்கத்தில் 8 தடன்களைக் கொண்ட ஒரு செயற்கைப் புல்தரைத் தடகளமும் இருக்கும். இதைத் தவிர இங்கே ஒராயிரம் படுக்கை வசதி கொண்ட, ஒரு தங்கும் விடுதியும் இருக்கும். அரங்கத்திற்கு, கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அமைப்பான FIFA சான்றளித்திருக்கிறது. விளையாட்டுக்களுக்கான எந்த ஒரு பெரிய கட்டமைப்பும் தயார் செய்யப்படும் போது, இது தேசத்தின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பையும் கொண்டு சேர்க்கிறது. கூடவே எங்கே அமைப்புமுறை இருக்கிறதோ, அங்கே தேசமெங்கிலும் இருந்தும் மக்களின் வருகை அமைகிறது, சுற்றுலாவுக்கு ஊக்கம் பெருகுகிறது, வேலைவாய்ப்பிற்கான சாத்தியங்கள் பிறக்கின்றன. அரங்கத்தினால் ஆதாயம், லடாக் மற்றும் தேசத்தின் பிற பாகங்களைச் சேர்ந்த பல இளைஞர்களுக்குக் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை நாம் பல விஷயங்கள் குறித்து அளவளாவினோம். மேலும் ஒரு விஷயம் உண்டு - அது இந்த வேளையில் அனைவரின் மனதிலும் ஒலிக்கக்கூடிய ஒன்று, அது தான் கொரோனா பற்றியது. கொரோனாவின் புதிய அலையோடு பாரதம் மிக வெற்றிகரமாகப் போராடி வருகிறது, இதுவரை கிட்டத்தட்ட 4500 கோடிக் குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டாகி விட்டது என்பது பெருமிதம் தரும் விஷயம்.
அதாவது 15 முதல் 18 வயது வரையிலான சுமார் 60 சதவீத இளைஞர்கள், மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள்ளாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டார்கள். இதனால் நமது இளைஞர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதோடு, அவர்கள் தொடர்ந்து படிக்கவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 20 நாட்களுக்குள்ளாக, ஒரு கோடி பேர்கள் முன்னெச்சரிக்கை கூடுதல் தவணையும் போட்டுக் கொண்டு விட்டார்கள். நமது தேசத்தின் தடுப்பூசி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நமக்கெல்லாம் வாய்த்த பெரும்பலம். இப்போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி இருக்கிறது.
இது மிகவும் ஆக்கப்பூர்வமான அறிகுறி. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேசத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளின் வேகம் அதிகப்பட வேண்டும் என்பதே பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் மனோரதம். உங்களுக்கே தெரியுமே, மனதின் குரலில் சில விஷயங்களைப் பற்றிப் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்பது.
அதாவது தூய்மை இயக்கத்தை என்றுமே மறவாதீர்கள், ஒருமுறையே பயன்படுத்தும் நெகிழிக்கு எதிரான இயக்கத்தை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டியது அவசியம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம் ஆகிய இவையெல்லாம் நமது கடமைகள், மேலும் நாம் தற்சார்பு பாரதம் இயக்கத்திற்காக முழுமூச்சோடு ஈடுபட்டிருக்க வேண்டும். நம்மனைவரின் முயற்சிகளால் மட்டுமே தேசம், வளர்ச்சியின் புதிய சிகரங்களை முத்தமிடும். இந்த விருப்பத்தோடு, உங்களனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago