புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக் கட்டுரையை அடுத்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் மென்பொருள் சர்ச்சை வெடித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின. இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது. அதற்கு காரணம், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புதிய செய்திக் கட்டுரை. 'உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர்' (The Battle for the World's Most Powerful Cyberweapon) என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த கட்டுரையில், "இஸ்ரேல் உடனான இரண்டு பில்லியன் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு கடந்த 2017-ல் பெகாசஸ் மென்பொருளை வாங்கியது" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பல்வேறு தகவல்கள் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதில், "இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு சந்தா அடிப்படையில் தனது கண்காணிப்பு மென்பொருளை ஒரு தசாப்த காலமாக விற்பனை செய்து வருகிறது. பாலஸ்தீனிய விவகாரத்தால் பல தசாப்தங்களாக இந்தியா - இஸ்ரேலிய உறவு உறைபனி போல் இருந்தது. ஆனால் மோடியின் இஸ்ரேலிய வருகைக்கு பின் இருநாட்டு உறவுகள் சுமுகமாக மாறின. 2017-ல் இந்திய பிரதமர் மோடியின் இஸ்ரேலிய பயணத்தின்போது, அவரும், முன்னாள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அந்நாட்டு கடற்கரையில் வெறும் கால்களில் நடந்தனர்.
» பிஹாரில் தொடரும் போராட்டம் | மாணவர்களின் கவலைகளைப் போக்க நடவடிக்கை - ரயில்வே அமைச்சர் உறுதி
இந்த உணர்வுகளுக்குக் காரணம் இருக்கிறது. அப்போது இருநாடுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. தோராயமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை சாதனங்களின் தொகுப்பை விற்பனை செய்வதற்கு அந்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. சில மாதங்களுக்குப் பிறகு, பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதன்பின், ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பாலஸ்தீனிய மனித உரிமைகள் அமைப்பு பார்வையாளராக இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது" என்று அந்தக் கட்டுரை விவரிக்கிறது.
நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரையால் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை பூதாகரமாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நமது ஜனநாயகத்தின் முதன்மை நிறுவனங்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசாங்கம் பெகாசஸை வாங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ராணுவம், நீதித்துறை என அனைவரின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது தேசத் துரோகம். மோடி அரசு தேசத் துரோகத்தை செய்துள்ளது" என்று கடுமையாக சாடியுள்ளார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தியாவின் எதிரிகளைப் போல மோடி அரசு செயல்பட்டு, இந்திய குடிமக்களுக்கு எதிராக போர் ஆயுதத்தைப் பயன்படுத்தியது ஏன்? இது தேசத் துரோகத்திற்குச் சமம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது கண்டனத்தில், "அந்த மென்பொருள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டையே பிக்பாஸ் நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறார்கள். இப்படி செய்வது பாஜகவால் மட்டுமே சாத்தியம். இந்திய வரி செலுத்துவோர் பணத்தை இந்தியர்களை கண்காணிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்" என்று சாடியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago