புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த அணிவகுப்பில் புதிய சீருடையுடன் ராணுவ வீரர்கள் வீர நடை போட்டு சென்றனர்.
நாட்டின் 73-வது குடியரசு தின விழா, டெல்லி ராஜபாதையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.20 மணிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து மெய்க்காப்பாளர்களின் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார்.
பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. குடியரசுத் தலைவரும் பிரதமரும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
ராணுவத்தின் பல்வேறு படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். சென்னை ஆவடியில் தயாரான அர்ஜுன் ரக பீரங்கி உட்பட பல்வேறு ரக பீரங்கிகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. அவை இந்தியாவின் ஆயுத வலிமையை பறைசாற்றும் வகையில் இருந்தன. ராஜ்புத் படை பிரிவினர் ராஜபாதையில் மிடுக்குடன் அணிவகுத்தனர்.
மெட்ராஸ் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட் வீரர்கள் உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுப்பில் பங்கேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் சீக்கிய படை பிரிவுகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
துணை ராணுவப் படை வீரர்கள், மத்திய படைகளின் வீரர்கள், தேசிய மாணவர் படையினர், ராணுவ இசைக் குழுவினர், விமானப் படை இசைக் குழுவினர் ஆகியோரும் அணிவகுத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து மேகாலயா, குஜராத், கோவா, ஹரியாணா, உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. மத்திய அரசு துறை ஊர்திகளும் இதில் பங்கேற்றன. 25 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அணிவகுப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை சென்றது. ராணுவ வீரர்கள் புதிய வகை சீருடை அணிந்து ஆயுதங்களுடன் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.
அணிவகுப்பு முடிந்ததும் விமானங் களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. 75 விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்தன. இதில் ரஃபேல் விமானங்கள் விண்ணில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின. அத்துடன் சுகோய், ஜாகுவார், எம்ஐ-17, சாரங், அபாச்சி, டகோட்டா, ராஹத், மேக்னா, ஏகலைவா, திரிசூல், திரங்கா, விஜய், அம்ரித் போன்ற விமானங்கள், ஹெலி காப்டர்களும் வானில் வட்டமடித்து சாகசங்கள் செய்தன.
தேசிய மாணவர் படையின் சாகச நிகழ்ச்சி, 480 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாராசூட் ரெஜிமெண்ட் ராணுவப் பிரிவு வீரர்கள் புதிய ரக போர் உடையில் பங்கேற்றனர். முதன்முறையாக விமானப் படை விமானிகள், விமானத்தை இயக்கிய காட்சி அங்கிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக இந்திய விமானப் படையின் உதவியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பெற்றிருந்தது.
அணிவகுப்பு முடிவடைந்ததும் சிறப்பாக பங்கேற்ற வீரர்களுக்கு பதக்கங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விழாவில் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள், முப்படை தளபதிகள், மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. அணிவகுப்பின்போது டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அணிவகுப்பு நடந்த ராஜபாதை உட்பட பல்வேறு பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல, பார்வையாளர்கள் எண்ணிக்கையும் 24 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago