பிரதமர் பதவியேற்பு செலவு: தனி கணக்கு பராமரிக்கப்படவில்லை என ஆர்டிஐ பதிலில் தகவல்

புதுடெல்லி: '2019-ம் ஆண்டு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு செலவு செய்யப்பட்ட விவரங்கள் தனி கணக்காக எதுவும் பராமரிக்கப்படவில்லை' என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தனிப்பெரும்பான்மையாக நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற பிறகு 2019-ம் ஆண்டு மே 30 அன்று நடந்த விழாவில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவின் செலவினங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேள்வி கேட்டிருந்தார். அதில், வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களுக்கான உணவு (அசைவம் மற்றும் அசைவம்) செலவு, தேநீர் செலவு, வெளிநாட்டினருக்கான விமான டிக்கெட் கட்டணம் உட்பட போக்குவரத்துக்கு ஏற்பட்ட செலவுகள், மலர் & விளக்கு அலங்காரங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி அமைப்புக்கு செய்யப்பட்ட செலவுகள், மேலும் அழைப்பிதழ் அட்டைக்கான செலவுகள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்டிஐ-யில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனுதாரருக்கு கொடுக்கப்பட்ட பதிலில், "விழாவுக்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் மொபைல் கழிப்பறைகளுக்கு ரூ.32,11,953, விளக்கு அலங்காரங்களுக்கு ரூ.11,79,750, ஆடியோ சிஸ்டம், வீடியோ போர்டுகள் மற்றும் யுபிஎஸ் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ரூ.18,63,744 என்கிற அளவில் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் மலர் அலங்காரங்களுக்கு ரூ.10,60,058 செலவிடப்பட்டது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.73,15,505 செலவானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "நிகழ்ச்சியில் சுமார் 8,000 விருந்தினர்கள் பங்கேற்றனர். என்றாலும் உணவுச் செலவு, தேநீர் செலவு போன்றவற்றுக்கென தனித்தனியாக கணக்குகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்களால் கொடுக்கப்படும் பில்கள் அவ்வப்போது செட்டில் செய்யப்படும். அதேபோல், அழைப்பிதழ் கார்களை அச்சிடுவது இந்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு பிரதிநிதிகளின் பயணச் செலவுகளைப் பொறுத்தவரை, அப்படி செய்யப்படவில்லை" என்று தெரிவித்து சில விவரங்களை ஜனாதிபதி மாளிகை வெளியிடவில்லை.

இதையடுத்து, ஜனாதிபதி மாளிகை தொடர்பாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி. அவர், "ஆர்டிஐ மனுவில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு தகவல் மறுப்பு செய்யப்பட்டது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும். அப்படியிருக்கையில் குடியரசுத் தலைவர் அலுவலகம் எப்படி ஆர்டிஐ மூலம் குடிமக்களின் கேள்வியை மறுக்க முடியும்?" என்று வினவியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE