உத்தரப் பிரதேச தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத்.
உத்தரப் பிரதேச தேர்தலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பதால் அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் குறித்து எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன. சமாஜ்வாடி கட்சி வலுவான வேட்பாளரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத், யோகியை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
யார் இந்த 'பீம் ஆர்மி' சந்திரசேகர் ஆசாத்? - சில ஆண்டுகள் முன் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணிக்கு முக்கிய காரணகர்த்தவாக அறியப்பட்டவர் சந்திரசேகர் ஆசாத். அந்தப் பேரணியில் தனது கையில் அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திக்கொண்டு முழக்கமிட்டது அவரை வெகு பிரபலமாக்கியது. சந்திரசேகர் ஆசாத் ராவண் என்றும் அழைக்கப்படும் இவரின் பூர்வீகம் மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமம்.
டெல்லி ஜும்மா மசூதி பேரணி நாடு முழுவதும் அவரை பிரபலப்படுத்தினாலும், அதற்கு முன்பாகவே அவர் உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில், தனது 'பீம் ஆர்மி' அமைப்பு மூலமாகவும், சமூகப் பணிகள் மூலமாகவும் பிரபலமாக வலம்வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசாத், 'பீம் ஆர்மி' அமைப்பை தோற்றுவிக்க முக்கியக் காரணம், பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம். சிறுவயது முதலே கன்ஷிராம் கருத்துகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் நோக்கத்துக்காக 'பீம் ஆர்மி' அமைப்பை நிறுவி பணியாற்றிவந்தார்.
» கோவா தேர்தல்: பாஜகவின் 34 வேட்பாளர்கள் அறிவிப்பு; மனோகர் பாரிக்கர் மகனை கைவிட்டதால் சலசலப்பு
என்றாலும் சில வருடங்கள் முன் நிகழ்ந்த சஹாரன்பூர் கலவரத்தின்போது பீம் ஆர்மி அமைப்பின் செயல்பாடு பட்டியிலன மக்கள் மத்தியில் அவரை கொண்டுச் சேர்த்தது. சஹாரான்பூர் பகுதியில் வசிக்கும் பட்டியிலன மக்களுக்கும் மாற்று சமூக மக்களுக்கும் இடையேயான கலவரத்தை கண்டித்து வலுவான போராட்டங்களை அந்த சமயத்தில் முன்னெடுத்தார் ஆசாத். அந்தப் போராட்டம் லட்சக்கணக்கான பட்டியிலன இளைஞர்களை ஈர்க்க, புதுயுக தலைவராக உருவெடுத்தார் ஆசாத். அதேபோல், குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பிறகு கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு எதிராக கடுமையான அரசியல் செய்தும் வருகிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பில் இருந்து சில நாட்களிலேயே பின்வாங்கினார். 'தனக்கென தனி கட்சி இல்லாததால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை' என்று அதற்கு விளக்கம் கொடுத்த ஆசாத், அந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் ஆதரவு கொடுத்தார்.
இதன்பிறகு அடுத்த சில மாதங்களிலேயே ஆசாத் சமாஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவியவர் இப்போது முறைப்படி தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார். 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட ஆசாத் சமாஜ் , புலந்த்ஷகார் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்கண்டது. இதில் வெற்றி கிட்டவில்லை என்றாலும், 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கி தொகுதியில் தங்கள் கட்சிக்கு இருப்பை உறுதிபடுத்தியது. இதன்பின் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஐந்து பஞ்சாயத்துகளையும் ஆசாத் சமாஜ் கைப்பற்றியது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசாத், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் தேர்தலில், சமாஜ்வாதியுடன் ஆசாத் கட்சி கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. அதன்படி, இந்தத் தேர்தலிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இக்கட்சிகள் இடையே நடந்த நிலையில், ஆசாத் 25 தொகுதிகள் வரை கேட்க, அகிலேஷ் அவருக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க ஒப்புக்கொண்டார். இதனால் ஆசாத் சமாஜ் தானாகவே கூட்டணியில் இருந்து விலகியது.
இந்தநிலையில்தான் தற்போது யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த வருடமே சந்திரசேகர் ஆசாத் சட்டப்பேரவைத் தேர்தலில் யோகியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். கடந்த வருடம் ஒரு பேட்டியில், "உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இடம் பெறுவது எனக்கு முக்கியமில்லை. யோகி ஆதித்யநாத்தை சட்டப்பேரவைக்கு வர விடக்கூடாது என்பது மட்டுமே இப்போது எனது நோக்கம். எனவே அவர் எங்கு போட்டியிட்டாலும் நான் போட்டியிடுவேன்" என்று தெரிவித்த சந்திரசேகர் ஆசாத், அதன்படி, தற்போது அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதை ஆசாத் சமாஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உ.பி. பட்டியிலன மக்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாற்றாக உருவெடுத்து வரும் ஆசாத் சமாஜ் கட்சிக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்திலே அதிக செல்வாக்கு உள்ளது. ஆனால், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூர் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை என்பது நிதர்சனம். கோரக்பூர் தொகுதியின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அது இதுவரை பாஜகவின் கோட்டையாக இருந்துள்ளது.
1989-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களே இங்கு வெற்றிபெற்றுவருகின்றனர். இடையில் ஒரே ஒரு முறை மட்டும் அகில பாரதிய இந்து மகாசபா வெற்றி பெற்றது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக வருவது சமாஜ்வாதி கட்சியே. ஆனால் இந்த முறை, உத்தரப் பிரதேச பட்டியிலன மக்கள் மத்தியில் தற்போது புது யுக தலைவராக உருவெடுத்து வரும் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுவது கோரக்பூர் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago