மோடியின் செல்ஃபி முதல் யோகியின் நேரடி விசிட் வரை: முலாயம் சிங் மருமகளின் முழு பின்னணி

By மலையரசு

பாஜகவில் இணைந்துள்ள முலாயம்சிங் யாதவின் இளைய மருமகள் அபர்னாவின் பின்னணி தொடர்பான தொகுப்பு இது.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவியாக இருப்பவர் அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் தலைநகரான லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். ஆனால், காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு சென்று போட்டியிட்ட ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார் அபர்னா.

இதனிடையே, முதல்வர் யோகி அமைச்சரவையிலிருந்த முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட மூவர் சமீபத்தில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக இன்று முலாயம்சிங்கின் மருமகளான அபர்னா யாதவ்வை தங்கள் கட்சியில் இணைத்துகொண்டது.

அபர்னா யாதவ் திடீரென பாஜகவில் இணைந்துவிடவில்லை. கடந்த ஐந்து வருடமாகவே பாஜகவுக்கு உறுப்பினர் இல்லாத ஒரு ஆதரவாளர் என்கிற வகையிலேயே அவரின் செயல்பாடு இருந்தது. அதனை தெரிந்துகொள்ளும் முன் இவரின் குடும்பப் பின்னணியை தெரிந்துகொள்ளலாம். அபர்னாவின் கணவன் பிரதீக் யாதவ் முலாயம் சிங்கின் இரத்த வாரிசு கிடையாது. ஆம், பிரதீக் முலாயம் சிங்கின் வளர்ப்பு மகன். முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மாலதி தேவி. இவர்களின் மகன் தான் அகிலேஷ் யாதவ். என்றாலும், அகிலேஷ் பிரசவத்தின் போதே மாலதி தேவி கோமா நிலைக்குச் சென்று படுத்தப்படுக்கையாகிவிட்டார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வரை இப்படி படுத்தப்படுக்கையாகவே இருந்து உயிரிழந்தார். இடைப்பட்ட காலத்தில் முலாயம் சிங்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சாதனா குப்தா என்ற அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. அந்த குழந்தை தான் இந்த அபர்னாவின் கணவர் பிரதீக் யாதவ். சாதனாவின் கணவர் சந்திர பிரகாஷ் என்பவர், முலாயம் உடனான மனைவியின் உறவை அறிந்து அவரைவிட்டு பிரிந்துச் சென்றுவிட்டார். இதன்பின்னர் ரகசிய உறவாக இல்லாமல், பிரதீக்கை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து சாதனாவுடன் வாழ்ந்து வந்தார் முலாயம்.

அகிலேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரும் பிரதீக்கை தங்களின் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு சொத்தில் பங்கு கொடுத்த சம்பவமும் நிகழ்ந்தன. அகிலேஷ் இன்றுவரை பிரதீக் கை தம்பி என்றே அழைப்பார். மேலும், முலாயம் சிங் தான் பிரதீக்கிற்கு அபர்னாவை மணமுடித்து வைத்தார். உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபர்னா, தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு பத்திரிகையாளர். உத்தரப் பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்துடன் நீண்ட வருடங்களாக நெருங்கி பழகும் ஒரு நபராக அபர்னாவின் தந்தை அரவிந்த்சிங் அறியப்படுகிறார். யோகியும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, அரவிந்த்சிங்கை சில ஆண்டுகள் முன் மாநிலத்தின் தகவல் ஆணையராக நியமித்து அழகு பார்த்தார்.

இதனிடையே, தான் அபர்னா கடந்த 2017 தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் தோல்வியை தழுவியிருந்தார். இந்த தோல்விக்கு பிறகு பாஜகவின் உறுப்பினர் ஆகாத விசுவாசி போல் மாறினார். யோகி முதல்வராக பதவியேற்றதுமே அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்தியது மட்டுமில்லாமல், இதில் சர்ச்சை எழுந்தபோது 'யோகி அனைவருக்குமான முதல்வர். அவரை சந்தித்து வாழ்த்து சொல்வதில் என்ன தவறு' என்று தைரியமாக பதில் கொடுத்தார். யோகியை போலவே பசுக்கள் மீது அக்கறை கொண்ட அபர்னா, தனியாக பசு பாதுகாப்பு இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்துக்கு ஒருமுறை யோகியையும் அழைத்து வந்து அமர்க்களப்படுத்தினார். இதேபோல் ஒருமுறை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செல்ஃபி எடுத்த அபர்னா, அதனை பொதுவெளியில் பதிவிட்டு 'நான் மோடியின் தீவிரமான ரசிகை' என உரக்கச் சொன்னார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், யோகி ஆதித்யநாத்தையும் அடிக்கடி புகழ்ந்து பேசும் அபர்னா, அகிலேஷ் யாதவ்வையும் விமர்சிக்க தவறியதில்லை.

அவரின் விமர்சனம் சிக்கலை ஏற்படுத்தும் என்ற ஐயம் எழ, பாஜக அரசு அவருக்கு ஒய் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவாக பேசியவர் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு பாஜக லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கலாம் என தெரிகிறது.

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவும் அபர்னாவும் நெருங்கிய தோழிகள். இரு வீட்டிலும் ஏதேனும் நிகழ்வுகள் என்றால் இருவரும் ஒரே போல் உடை உடுத்துவது, ஒன்றாக சுற்றுவது ஆகியவை நடக்கும். ஆனால் இப்போது அவர் பாஜகவில் இணைந்திருப்பது அவர்கள் குடும்பத்திலும் பிரிவை ஏற்படுத்துமா என்பது தான் அவர்களை சார்ந்த உறவினர்களின் கவலையாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்