குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணிப்பு: குறிப்பிட்ட சில மாநிலங்களைக் குறிவைக்கிறதா பாஜக? 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகம், கேரளா, மேற்குவங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக ஆளாத மாநிலங்களில் விரோத மனப்பாண்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுடெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரை கவர்ந்திழுக்கும். அதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு தமிழக அரசும் மாநிலத்தின் சார்பாக இடம்பெற வேண்டிய ஊர்திகளின் மாடல்களை அனுப்பியிருந்தது. ஆனால், இம்முறை தமிழக அரசு அனுப்பிவைத்த மாடல்களையெல்லாம் மத்திய அரசு நிராககரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கிய விழாவான குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உண்மை அறிவோம்: இந்நிலையில், எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களுடைய பொய்யான பரப்புரையின் மூலம் போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். குடியரசு தின விழாவும் நம் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் - உண்மை அறிவோம்! என்று கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல.. தமிழகம் மட்டுமல்ல, கொல்கத்தா, கேரள மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தங்கள் மாநில அலங்கார ஊர்தியை நிராகரிக்க எந்தவித காரணமுமே இல்லை, மேற்குவங்க மாநில மக்களை வேதனைப்படுத்த மட்டுமே இது செய்யப்பட்டுள்ளது. எந்தவித காரணமும் சொல்லாமலேயே எங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய ராணுவத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு என்ற தலைப்பில் நாங்கள் அலங்கார ஊர்தி தயார் செய்திருந்தோம். அந்த ஊர்தியில், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தா, சித்தரஞ்சன் தாஸ், அரபிந்தோ மாதங்கினி, பிர்சா முண்டா உள்ளிட்ட தேசபக்தர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த ஊர்தியை நிராகரித்து சுதந்திரப் போராட்ட வீரர்களை மத்திய அரசு சிறுமைப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தா பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களுக்காகவே இந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டிருக்கும். நேதாஜியின் பங்களிப்பு என்னவென்று பாஜகவுக்கு தெரியாமல் இல்லை. நேதாஜி போன்ற தலைவர்களை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல், கேரளாவிலும் குடியரசு தின விழாவுக்கான ஊர்திக்கும் மத்திய அரசு நோ சொல்லியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், "குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு எதிராக பாஜக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொள்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் பாஜக ஆளாத மாநிலங்களில் விரோத மனப்பாண்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழைய தந்திரம்: ஆனால், மாநில முதல்வர்கள் பிரதமருக்கு அடுத்தடுத்து கடிதம் எழுதியுள்ள இந்தப் போக்கு பழைய தந்திரம். குறிப்பிட்ட சில மாநிலங்களின் முதல்வர்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். நாட்டின் கூட்டாட்சி மாண்பை சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இந்த மாநில முதல்வர்களுக்கு என்று தனியாக நேர்மறையான கொள்கையே இல்லை. அதனால், பழைய தந்திரங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.

குடியரசு தின விழாவில் எந்த அலங்கார ஊர்தி இடம்பெற வேண்டும் என்பதை, நிபுணர் குழுவே தேர்வு செய்கிறதே தவிர மத்திய அரசு அல்ல. இந்தக் குழுவில் கலை, கலாச்சாரம், சிற்பக்கலை, இசை, நடனம் என பல்துறை வித்தகர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களே மாநில அரசுகளின் பரிந்துரைகளை பரிசீலித்து முடிவு செய்வார்கள். அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, கருத்துரு, அதன் கண்கவர் நேர்த்தி ஆகியனவற்றின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும். நேரமின்மையால் 51 விண்ணப்பங்களில் சிலவற்றை நிராகரிக்க நேர்ந்தது என்றும் அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE