மனோகர் பாரிக்கர் இல்லாத சட்டப்பேரவைத் தேர்தல், ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, இந்துத்துவாவை உயர்த்திப் பிடிக்கும் மனப்போக்கு, சிறுபான்மையினரின் அதிருப்தி ஆகியவற்றைக் கடந்து கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கரை சேர்ந்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திருப்புமுனை
அரசியல்ரீதியாக, பாஜகவின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களைக் கொண்டுவந்தது கோவா என்று அடிக்கடி நிரூபித்துள்ளது.
» இந்தியாவில் ஒரேநாளில் 2.58 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு; 8,000-ஐ கடந்தது ஒமைக்ரான் பாதிப்பு
» சமாஜ்வாதிக்கு மட்டும்தான் கட்டுப்பாடா, பாஜகவுக்கு இல்லையா? - தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் கேள்வி
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோவாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 2002-ம் ஆண்டு கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தபோது, அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், கோத்ரா கலவரத்தைச் சுட்டிக்காட்டி, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், அப்போது மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-வது அரசியல்ரீதியான திருப்பம் நடந்தது. கோவாவில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு நரேந்திர மோடியை பிரதமராக முன்மொழிந்து வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
அரசியல் மாற்றம்
இந்த இரு சம்பவங்கள்தான் தேசிய அரசியல் மாற்றத்துக்கே காரணமாக இருந்தன. இந்த இரு சம்பவங்களில் ஒன்று நடக்காமல் இருந்தாலே விளைவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
மனோகர் பாரிக்கரின் முதல் குரல்தான் பாஜக தலைமையைத் திருப்பிப் பார்க்கவைத்து, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வைத்தது. ஆக, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முதன்முதலில் வெளிப்படையாக முன்மொழிந்தது மனோகர் பாரிக்கர், அதுவும் கோவாவில்தான்.
இந்த இரு சம்பவங்களும் நடந்தபோது, கோவாவில் மனோகர் பாரிக்கர்தான் முதல்வராக இருந்தார். 2014-ல் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உறுதுணையாகவும், முடிவுகளுக்குப் பக்கபலமாகவும் பாரிக்கர் இருந்தார்.
வளர்த்தவர் பாரிக்கர்
கோவாவிலும் பாஜக எளிதாக முளைத்துவிட வில்லை, பிராந்தியக் கட்சிகள், சிறு கட்சிகளுக்கு இடையே பாரிக்கரின் அயராது உழைப்பு, பிரச்சாரம், பாஜக சித்தாந்தங்கள் அனைத்தையும் இழைத்துதான் பாரிக்கர் பாஜகவை வளர்த்தார் என்பதில் மிகையில்லை.
இன்னும் சொல்லப்போனால், தேசிய கட்சியான பாஜகவுக்கு 1980-2000 வரை கோவாவில் முகவரியே இல்லை. அங்கு பாஜகவை வளர்த்தெடுத்தவர் மனோகர் பாரிக்கர்தான். 2000 ஆண்டுக்குப் பின்புதான் பாஜகவின் தாமரை மலரத் தொடங்கியது.
பிராந்திய கட்சி ஆதிக்கம்
போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா சுதந்திரம் பெற்றபின், பெரும்பாலும் பிராந்திய கட்சிகள், உள்ளூர்க் கட்சிகளின் ராஜ்ஜியமாகவே இருந்தது. மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி), கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்தோடு இணைக்க வேண்டும் எனப் போராடியது. ஆனால், கோவாவுக்குத் தனியாக அடையாளம் வழங்கப்பட்டபின் அந்தக் கட்சியின் கோரிக்கை உயிரிழந்தது.
பல்வேறு கனிமவள சுரங்கங்களின் உரிமையாளர் தயானந்த் பந்தோகர் என்பவர் எம்ஜிபி கட்சியை உருவாக்கினார், காவிக் கொடி, சிங்கம் பொறிக்கப்பட்டதாக கொடி அதன் சின்னம். கோவாவில் உள்ள இந்து மக்கள், இதர பிறப்டுத்தப்பட்டோர் இந்தக் கட்சியின் முக்கிய வாக்குவங்கி.
முதல் அடையாளம்
மகாராஷ்டிராவைப் போலத்தான் கோவாவிலும் பாஜக படிப்படியாக அரசியலைத் தொடங்கியது. இந்து பிராந்தியக் கட்சியுடன் சிறிய அளவில் கூட்டணியை ஏற்படுத்தி, அதில் வேரூன்றியது. கடந்த 1989-ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்சினையை மையமாக வைத்து, கோவா அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. 0.39 சதவீத வாக்குகளைத்தான் பெற்றது.
மக்களவைத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் பின்புலம் பாஜகவின் மனோகர் பாரிக்கரும், எம்ஜிபி கட்சியின் ஸ்ரீபாட் நாயக்கும் சேர்ந்து கூட்டணி அமைத்து 3-வது இடத்தைப் பிடித்தனர். ஆனால் இந்தக் கூட்டணிக்கு 1994-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பலன் கிடைத்தது. மனோகர் பாரிக்கர் தலைமையில் எம்ஜிபி கூட்டணியில் பாஜக 9.5 சதவீத வாக்குகளைப் பெற்று 4 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு முதன்முதலில் சட்டப்பேரவைத் தொகுதியைப் பெற்றுக்கொடுத்து அஸ்திவாரமிட்டவர் பாரிக்கர்தான்.
எதிர்க்கட்சிஅந்தஸ்து
எம்ஜிபி கட்சியும் ஓரளவு இந்துத்துவா சிந்தனை கொண்டது. அதன் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டர்கள், பாஜகவும் ஆர்எஸ்எஸ் பின்புலம், இந்துத்துவா சிந்தாந்தத்தைக் கொண்டது என்பதால் இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் இல்லாமல் சென்றது.
கடந்த 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்ஜிபி கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக தேர்தலைச் சந்தித்தது. எம்ஜிபி கட்சியை வைத்து மாநிலத்தில் வளர்ந்த பாஜக, தேர்தலில் அந்தக் கட்சியைக் கழற்றிவிட்டு தேர்தலைச் சந்தித்து அதைவிட அதிக இடங்களில் வென்று, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. பாஜக 10 இடங்களிலும், எம்ஜிபி கட்சி 4 இடங்களில் மட்டுமே வென்றன.
நிலையற்ற அரசியல்
கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டுவரை கோவாவில் ஆட்சியில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் வந்தன. காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்தும் உள்கட்சி சிக்கலால் ஆட்சியை முழுமையாக நடத்த முடியவில்லை. இதையடுத்து, மனோகர் பாரிக்கர் முதல் முறையாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், சிறிய கட்சிகள் உதவியுடன் 2002-ம் ஆண்டு ஜூன் முதல் 2005 பிப்ரவரி வரை ஆட்சி அமைத்தார்.
கோவாவில் 2007 முதல் 2012 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், நிர்வாகத்தை மோசமாக்கியது. சுரங்க ஏலத்தில் அதிகமான ஊழல், மோசமான நிர்வாகம், ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால், அதைச் சுட்டிக்காட்டி சிறந்த நிர்வாகத்தை, ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவேன் என்று பாரிக்கர் வாக்குறுதியளித்து மக்களைச் சந்தித்தார்.
பாஜக மற்ற கட்சிகளைவிட வித்தியாசமானது, நிலையான ஆட்சி தருவோம் எனக் கூறி பாரிக்கர் செய்த பிரச்சாரத்துக்குப் பலன் கிடைத்தது.
கிறிஸ்தவர்கள் ஆதரவு
2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 21 இடங்களில் வென்றது. எம்ஜிபி கட்சியின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் முதல்வரானார்.
கோவாவில் கிறிஸ்தவர்கள் ஆதரவு இல்லாமல் பாஜக பெரும்பான்மை பெற முடியாது என்பதை பாரிக்கர் நன்கு புரிந்திருந்தார். ஏனென்றால், கோவாவில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்களின் வாக்குகளும் பாஜகவுக்குக் கிடைத்தால் மட்டுமே முழுப் பெரும்பான்மை கிடைக்கும். இல்லாவிட்டால் கோவாவில் பாஜகவுக்கு ஒருபோதும் பெரும்பான்மை கிடைக்காது.
கோவாவில் கிறிஸ்தவர்கள் துணையில்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த மனோகர் பாரிக்கர் 2012 தேர்தலில் பாஜக 6 கிறிஸ்தவ வேட்பாளர்களைக் களமிறக்கினார், அனைவரும் வெற்றி பெற்றனர். அடுத்ததாக 2017-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக 8 கிறிஸ்தவ வேட்பாளர்களைக் களமிறக்கி அதில் 7 பேர் வெற்றி பெற்றனர்.
பாரிக்கரின் மனப்போக்கு
கோவாவில் பாஜக காலூன்ற முடியும் என்றால் அதற்கு கிறிஸ்தவர்களின் துணையும் தேவை என்பதை உணர்ந்த மனோகர் பாரிக்கர் அவர்களை அரவணைத்துச் சென்றார். கோவாவின் சால்கேட், மர்மகோவா, திஸ்வாடி, கியுபென், பார்டேஸ் ஆகியவற்றில் மட்டும் 17 தொகுதிகள் உள்ளன.
இந்தத் தொகுதிகள் அனைத்திலும் கிறிஸ்தவர்கள்தான் அதிகம் அதாவது 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களின் வாக்குதான் அங்கு ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். பிற பகுதிகளில் 25 சதவீத வாக்குகள் சிறுபான்மையினரிடம் இருக்கிறது.அதாவது 7 இடங்கள் சிறுபான்மையினர் வசம் உள்ளன.
கிறிஸ்தவர்களின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்ட மனோகர் பாரிக்கர், கிறிஸ்தவர்கள் வாக்குகளைப் பெறாமல் பாஜக கோவாவில் சொந்தமாக ஆட்சி அமைக்க சாத்தியமே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். இதனால்தான் பாரிக்கர் தான் உயிருடன் இருக்கும்வரை தேவாலய நிர்வாகத்துடனும், கிறிஸ்தவ அமைப்புகளுடனும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டார்.
2012-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக மாநிலத்தில் கிறிஸ்தவ சமூக மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதையே பாரிக்கர் முன்மொழிந்தார்.
பாரிக்கர் அணுகுமுறைக்கு வெற்றி
2012-ம் ஆண்டு தேர்தலில் பாரிக்கரின் அணுகுமுறை, அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால், முதல்வராக மீண்டும் அமர்ந்த பாரிக்கர், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், அதில் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி ஏற்கச் சென்றார்.
பின்னர் 2017-ம் ஆண்டு தேர்தலில் கோவா அரசியலுக்கு பாரிக்கர் மீண்டும் சென்றார். பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வென்றன. இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க கடுமையாகப் போராடின.
பல்வேறு கட்சிகளைக் கூட்டணிக்கு அழைத்தபோது, பாரிக்கர் முதல்வராக வந்தால் ஆதரவு தருகிறோம் என எம்ஜிபி கட்சியும், கோவா பார்வர்ட் கட்சியும் தெரிவித்தன. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் முதல்வரானார்.
ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபின், பாஜகவின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கும் போக்கால், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 11 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சி 17 எம்எல்ஏக்களுடன் இருந்தது, 3 எம்எல்ஏக்களுடன் தனித்து விடப்பட்டது.
பாஜகவுக்கு பாரிக்கர் முகம்
ஆக, கோவாவில் பாஜக அரசியல் என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனோகர் பாரிக்கர் என்ற ஒற்றை மனிதரைச் சுற்றித்தான் வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பாஜகவின் சரிவுகளைச் சீரமைத்து, இருமுறை தொடர்ந்து ஆட்சியில் அமரவைத்ததும் மனோகர் பாரிக்கர்தான்.
மனோகர் பாரிக்கர் உயிருடன் இருந்தபோதும், அவர் முதல்வராக இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவு தருவதற்கே கட்சிகள் மறுத்துவிட்டன என்றால், அது பாஜகவுக்கான நன்மதிப்பும், நட்பும் அல்ல, பாரிக்கரின் மீதான மரியாதை, நட்புணர்வு மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் பாரிக்கர் இல்லை என்றவுடன் பாஜக கூட்டணியில் இருந்த எம்ஜிபி கட்சி வரும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுடனும், கோவா ஃபார்வர்ட் கட்சி காங்கிரஸுடனும் இணைந்து போட்டியிடுகின்றன. பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.
ஆதலால், கோவாவில் பாஜகவுக்கு முகம் என்பது பாரிக்கர் முகம்தானே அன்றி பாஜக முகமாக அவர் உயிரோடு இருக்கும்வரை இல்லை. ஆனால், மனோகர் பாரிக்கர் இறப்புக்குப் பின் பாஜகவின் இயல்பான குணம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
விரோதப் போக்கு
புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் இந்துத்துவாவை உயர்த்திப் பிடிப்பதும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் பேசுவதும், தேவாலாயங்கள் குறித்து சர்ச்சையாகப் பேசுவதும் பாஜகவுக்குப் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், வரும் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கோவாவையும், கோவா மக்களையும் நன்கு அறிந்த அரசியல் அனுபவம் வாய்ந்த மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில் பாஜக எந்தவிதமான அனுகுமுறையைக் கடைப்பிடித்து தேர்தலில் வெல்லப் போகிறது, சமூக நல்லிணக்கமா அல்லது தீவிர இந்துத்துவாவா என்பதைப் பொறுத்து பாஜக கப்பல் கரை சேரும்.
பிரதமர் மோடி தேர்தலில் கூறும் வளர்ச்சி அரசியல், இரட்டை இன்ஜின் நிர்வாகம் போன்ற பேச்சுகள், வாக்குறுதிகள் கோவா தேர்தலில் எடுபடுமா என்பதைக் காத்திருந்துகான் பார்க்க வேண்டும்.
இந்துத்துவா வெல்லுமா?
மற்ற மாநிலங்களைப் போல் இங்கு பாஜக தனது இந்துத்துவா சித்தாந்தங்களை உயர்த்திப் பிடித்தால் அது இங்கு பலன் அளிக்குமா அல்லது பாஜக அரசியல் வெற்றிக்காகத் தனது கொள்கைகளில் சமரசம் செய்யுமா என்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
சமூக நல்லிணக்கம் எனும் கலங்கரை விளக்கின் உதவியால்தான் இத்தனை தேர்தலிலும் மனோகர் பாரிக்கர் பாஜகவைக் கரைசேர்த்தார் என்பதை மட்டும் பாஜக மறந்துவிடக்கூடாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago